ODI World Cup Records: ”உலகக்கோப்பை கேப்டன்சிப்ல நான் கிங்”.. யாரும் தொடமுடியாத உச்சத்தில் ரிக்கி பாண்டிங்!
ODI World Cup Records: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 17 போட்டிகளில் அணியை வழிநடத்தி 14 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் டிராவும் ஆகியுள்ளது.
ODI World Cup Records: கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியமான சர்வதேச தொடர் என்றால், அது ஐசிசி நடத்தும் உலகக்கோப்பைத் தொடர்தான். இந்த தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுமான வாய்ப்பு என்பது ஒரேமாதிரியானதாக இருக்கும். தொடர் தொடங்கியது முதல் தங்களின் அபிமான அணி இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை ஆரவாரத்துடன் ஏந்தும் காட்சியைப் பார்க்க, உலகம் முழுவதும் ஒவ்வொரு அணிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதே நேரத்தில் தங்களது அபிமான அணி முக்கியமான போட்டியில் ஏதேனும் தவறு செய்து, அதன் காரணமாக தொடரில் இருந்து அணி விலகநேரிட்டால், வீரர்கள்மீது வெறுப்பை வாரி வீசவும் ரசிகர்கள் தயங்குவதில்லை.
இப்படியான பெரும் எதிர்ப்பார்ப்பும் பரபரப்பும் அழுத்தமும் நிறைந்த தொடரில் ஒரு அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வதென்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு தொடரை முழுமையாக வெல்லவேண்டுமானால் ஒரு கேப்டன் தனது அணி குறித்து எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளாரோ அதே அளவிற்கு தங்களுடன் போட்டிபோடும் அணியைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து வைத்துக்கொள்வது மட்டும் இல்லாமல், அந்த அணியை வீழ்த்துவதற்கான செயல் திட்டம் இருக்க வேண்டும். செயல் திட்டத்தை களத்தில் செயல் படுத்தி எடுபடவில்லை என்றால், உடனடியாக முக்கிய முடிவுகள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் கோப்பை வசப்படும்.
இவ்வளவு அழுத்தம் நிறைந்த தொடரில் ஒரு கேப்டன் ஜாம்பவான திகழ்ந்துள்ளார் என்றால் அதனை பாராட்டித்தான் ஆகவேண்டும். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக மொத்தம் 3 சீசன்கள் விளையாடியுள்ளார். அதாவது 2003,2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார். இதில் இரண்டு முறை அதாவது 2003 மற்றும் 2007ஆகிய ஆண்டுகளில் தொடரை வென்றார். கேப்டனாக மொத்தம் 29 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ள ரிக்கி பாண்டிங் அதில் 26 போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார். 2 போட்டிகள் தோல்வியில் முடிந்துள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது.
மேலும் ரிக்கி பாண்டிங்கைப் பொறுத்தவரையில் மொத்தம் 5 ஒருநாள் உலகக்கோப்பைகளில் விளையாடியுள்ளார். இதில் வீரராகவும், கேப்டனாகவும் மொத்தம் 3 கோப்பைகளை வென்றுள்ளார். ரிக்கி பாண்டிங்கிற்கு முன்னாதாக உலகக்கோப்பை தொடர் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து இரண்டு வருடங்கள் அதாவது 1975 மற்றும் 1979ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அப்போது அந்த அணியை வழிநடத்தியது க்ளைவ் லாய்டு. இந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 17 போட்டிகளில் அணியை வழிநடத்தி 14 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் டிராவும் ஆகியுள்ளது.