Director Marimuthu: 3 நிபந்தனைகள்.. பிரபலமான ஒரே ஒரு வார்த்தை.. எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடிக்க வந்தது இப்படித்தான்..!
பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ராஜ்கிரண், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அவர், தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய 2 படங்களை இயக்கியுள்ளார். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்துவுக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திருப்புமுனையாக அமைந்தது.
படங்களின் மூலமாக மக்களிடம் பரீட்சையமான மாரிமுத்து சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்னும் கேரக்டரில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீரியலில் நடிக்க சொன்ன ராதிகா
முன்னதாக மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தான் எப்படி சின்னத்திரைக்குள் வந்தேன் என்பது பற்றி பேசியிருந்தார். அதில், “ நடிகை ராதிகா என்னிடம் சீரியலில் நடிக்க சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் நான் தான் சினிமா நல்லப்படியா போய்கிட்டு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டே இருந்தேன். இப்படியாக வாழ்க்கை போய் கொண்டிருந்த நிலையில் திடீர்ன்னு ஒருநாள் இயக்குநர் திருச்செல்வம் எனக்கு போன் பண்ணி பேசினார். நான் அதற்கு முன்னால் அவருடன் பேசியது கிடையாது. அதேசமயம் திருச்செல்வம் கோலங்கள் உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கியுள்ளார் என்பது தெரியும்.
என்னிடம் பேசிய அவர், இந்த மாதிரி சின்னத்திரையில் நீங்க எண்ட்ரீ கொடுக்க முடியுமா என கேட்டார். நானும் பெரிய கேரக்டர் என்றால் நடிக்க ரெடி என சொல்லி விட்டேன். உடனே எதிர்நீச்சல் சீரியலின் கதையை கிட்டதட்ட 3 மணி நேரம் என்னிடம் சொன்னார். இந்த சீரியல் 1500 எபிசோட்கள் வரை செல்ல வேண்டும் என தயாரிப்பு தரப்பு தன்னிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார். இப்படித்தான் ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டரில் நான் நடித்தேன்.
எதிர்நீச்சலில் நடிக்க 3 நிபந்தனைகள்
கிட்டதட்ட 4, 5 வருடங்கள் இந்த சீரியல் போகும் என்பதால் மாதம் 12 முதல் 15 நாட்கள் தேதி வேண்டுமென திருச்செல்வம் கேட்டார். நான் உடனே 3 நிபந்தனைகளை விதித்தேன். அதன்படி “பெரிய கேரக்டர், நான் வசனங்களை பார்த்து படித்து அப்படியே பேசமாட்டேன், சினிமாவில் வாங்கும் சம்பளத்தை விட கொஞ்சம் அதிகம் தர வேண்டும்” என்பது அந்த நிபந்தனைகள். இதனை திருச்செல்வத்திடம் சொல்லவும் அவரும் சரி என சொன்னார். இதன் காரணமாகவே முழுமூச்சாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன்.
எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை ஒளிபரப்பான 500 எபிசோடில் கிட்டதட்ட முக்கால்வாசி எபிசோடில் நடித்துள்ளார் மாரிமுத்து. இதில் அவர் சொல்லும் ‘இந்தாம்மா ஏய்’ என்னும் வார்த்தைக்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் வயது வித்தியாசமில்லாமல் இருந்தனர். எதிர்நீச்சல் சீரியலில் நடித்தப் பிறகு எங்கு போனாலும் கூட்டம். என்னை பாராட்டுகிறார்கள்” என மாரிமுத்து அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இனி அவர் இடத்தில் யாரை நடிக்க வைத்தாலும் கண்டிப்பாக மாரிமுத்து போல வரமுடியாது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.