ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,436 வழக்குகளில் ரூ.20½ கோடிக்கு தீர்வு

விழுப்புரம் : விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,436 வழக்குகளில் ரூ.20½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான மணிமொழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். நீதிபதிகள் இளவரசன், வெங்கடேசன், ராஜசிம்மவர்மன், பாக்கியஜோதி, புஷ்பராணி, கவுதமன், தமிழ்செல்வன், வரலட்சுமி, லட்சுமி, தனம், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிங்க: TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
சமரச அடிப்படையில்
இம்முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், நிலப்பிரச்சினை தொடர்பான வழக்குகள், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்டவை எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது. அதுபோல் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், அரசு வக்கீல் சுப்பிரமணியன், முன்னாள் அரசு வக்கீல் வேலவன், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
2,436 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 7,600-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 2,224 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.19 கோடியே 33 லட்சத்து 85 ஆயிரத்து 520-க்கு தீர்வு காணப்பட்டது. அதேபோல் நீதிமன்றத்தில் பதியப்படாத 212 வங்கி வாராக்கடன் சார்ந்த வழக்குகளில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 51 ஆயிரத்து 728-க்கு தீர்வு காணப்பட்டது. மொத்தத்தில் 2,436 வழக்குகளில் ரூ.20 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 248-க்கு தீர்வு காணப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள், சட்ட தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், வானூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் ஆகிய நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் 21 அமர்வுகள் கொண்ட நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனர்.

