சட்டசபை கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி என மாற்றி அறிவிப்பு, இதற்கு காரணம் என்ன? - சபாநாயகர் அப்பாவு
அரசு கொள்கை முடிவாக தேயிலை தோட்டத்தை கையகப்படுத்த முடிவு எடுக்க வேண்டும். இந்த அரசு சாமானிய மக்களின் சிறு பிரச்சினைகளுக்கு கூட துணை நிற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் சுற்றுலா மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சட்டப்பேரவை கூட்டத்தொடர் 24.06.24 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 20 தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நடத்தப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும் நாளைய தினம் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் வைத்து அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”மாஞ்சோலை தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கை, அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நானும் இந்த மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என்றார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலன் குறித்து இந்த அரசு நல்ல முடிவை எடுக்கும், சம்பளம் குறித்த . போராட்டத்தில் முன்பு நாங்கள் கலந்து கொண்டோம். இப்போது அதுவல்ல பிரச்சனை. வனத்திற்கே எடுத்துக் கொள்ளலாம் என வனத்துறைக்கு எண்ணம் உள்ளது.
பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த வனப்பகுதியில் நமது தொழிலாளர்கள் அங்கு இருந்தால் மட்டுமே வனத்திற்கும் நல்லது நமக்கும் நல்லது. கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்தது. ஆகவே தோட்ட தொழிலாளர்கள் தான் நாட்டிற்கும், வனத்திற்கும் பாதுகாப்பு. ஆகவே அங்கு இருப்பது தான் நமக்கும் நல்லது. எனவே அரசு கொள்கை முடிவாக தேயிலை தோட்டத்தை கையகப்படுத்த முடிவு எடுக்க வேண்டும். இந்த அரசு சாமானிய மக்களின் சிறு பிரச்சினைகளுக்கு கூட துணை நிற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் அதிகாரி சொன்னதனுடைய அடிப்படையில் அதை கவனத்தில் கொண்டு அறிவிப்புகள் வெளியாகும். அரசு நலத்திட்டங்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கான அறிவிப்பு நிறுத்தப்படும். மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார். நாங்குநேரி, வள்ளியூர் பகுதிக்கு வழக்கமாக பேருந்து சென்று வருவதில் தொடர்ந்து இருக்கும் சிக்கல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எல்லா ஊர்களுக்கும் பேருந்து செல்ல வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறோம். அரசு எல்லா ஊருக்கும் பேருந்து வசதி செய்து உள்ளது. ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிசெய்யப்படும் என்றார்.
தொடர்ந்து மாஞ்சோலை தொழிலாளர்கள் குறித்து பேசிய அவர், யாராவது கட்டாயப்படுத்தி கையெழுத்து கேட்டால் அவர்களிடம் நம்மிடம் தெரிவிக்கலாம். ஆனால் பலர் கொடுத்திருக்கின்றனர் அது அவர்களாகவே கொடுத்ததாக தெரிகிறது. ஆட்சியரிடம் மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, அவ்வாறு கொடுத்திருந்தால் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும். தண்ணீர், மின்சாரத்தை அங்கு யாரும் கட் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.