மத்திய அமைச்சருக்கு விபூதி பூசி ஆசி வழங்கிய முதலமைச்சர்
அப்பா பைத்தியம் சாமி சித்தர் கோயிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு முதல்வர் ரங்கசாமி எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை அவருக்கு பிரசாதமாக கொடுத்தார்.
புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று மதியம் வந்தார். முன்னதாக கவர்னர் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை சந்தித்துவிட்டு, மதியம் 2:30 மணிக்கு திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.
முன்னதாக திலாஸ்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் கோயிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அங்கு வழிபாடு மேற்கொண்டார். அப்போது பூஜை செய்து ஆரத்தி காட்டிய முதலமைச்சர் ரங்கசாமி, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை அவருக்கு பிரசாதமாக கொடுத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்ற அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டார். அப்போது கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு அர்ஜுன் ராம் மேக்வால் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது;
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புதுச்சேரி வர்த்தகம், கலாசாரம், மதம் ஆகியவற்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அரசு நாட்டின் தேவைகளை மனதில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. நுகர்வோர் புகார்கள் விரைவாகவும், குறைந்த செலவில் தீர்க்க விதிமுறைகள் எளிமையாக்கி உள்ளது. தவறான விளம்பரங்கள் இச்சட்டத்தின் கீழ் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. நுகர்வோர் நலனுக்காக செயல்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய காலங்களில், கட்டடதாரர்களிடம் இருந்து வீடுகளை பெற நுகர்வோர் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. நில அளவைப்பற்றி தெளிவான விவரங்களும் இல்லை. ஆனால் தற்போது ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட டெவலப்பர்கள் மட்டுமே தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பிறகே பணிகளைத் தொடங்க முடியும்.
சந்தையில் இருந்து குறைபாடுள்ள பொருட்களை மீண்டும் வாபஸ் பெறுவது, சேதம் ஏற்பட்டால் நுகர்வோருக்கு இழப்பீட்டை வழங்குவது உள்ளிட்ட விதிகள் இதில் அடங்கும். பல தனியார் நிறுவனங்கள் அரசு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 40 சதவீத புகார்கள் நேரடியாக நிறுவனங்களுக்கு அனுப்படுகிறது. இது அதிவேக தீர்வுக்கு வழிவகுக்கிறது' என்றார். பயிற்சியில் பங்கேற்ற ஆணைய தலைவர், உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.