Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: தமிழ்நாட்டில் லட்சிய கூட்டத்துக்கும் ரசிகர்கள் கூட்டத்துக்கும் இடையே போர் என, தவெக தலைவர் விஜயை சீமான் மறைமுகமாடி சாடியுள்ளார்.

Seeman TVK Vijay: திமுகவின் திட்டபடியே விஜயை சீமான் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளதாக, கடும் விமர்சனங்கள் எழந்துள்ளன.
விஜய் மீது சீமான் அட்டாக்:
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, “ தமிழ் தேசியத்தின் உரிமை, விடுதலை என்ற புனித கனவை உயர்ந்த லட்சியமாக கொண்டு செல்லும் அரசியலே நம் நோக்கம். இது சினிமா அல்ல, இது சாதாரண அரசியல் அல்ல. தற்போது சிலர் ரசிகர் கூட்டத்தை வைத்து அரசியலாக்க முயற்சி செய்கின்றனர், ஆனால் நாம் லட்சியக் கூட்டத்தை உருவாக்குகிறோம்.
ஆத்தாடி பெரியம்மா மகன்ல, சித்தப்பால, இதுலயேதான்டா நம்ம... இனிமே அந்த பாவம் பாக்க கூடாது. பெத்த தாய், தந்தையே வந்தாலும் லட்சியத்திற்கு எதிராக இருந்தால் எதிரிகள் தான். லட்சிய கூட்டத்துக்கும் - ரசிகர்கள் கூட்டத்துக்கும் இடையே போர். தமிழ்தேசிய இனத்தின் உரிமை கனவை கொண்டுள்ள சித்தாந்தமா - சினிமாவா? வா மோதி பார்க்கலாம்” என ஆவேசமாக பேசினார். அவருடைய இந்த ஒட்டுமொத்த விமர்சனங்களுமே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிரானது தான் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.
விஜய்க்கு எதிராக போர்
நடிகர் விஜய் கட்சி தொடங்கபோவதாக அறிவித்ததுமே, எனது தம்பி.. தம்பி என வாஞ்சையுடன் சீமான் பேசி வந்தார். ஆனால், கட்சி மாநாட்டில் பெரியாரை கொள்கை தலைவராக ஏற்று தவெக தனது கொள்கைகளை அறிவித்த பிறகு, சீமானின் நிலைப்பாடு ஒட்டுமொத்தமாக மாறியது. ஆளும் திமுகவை காட்டிலும், விஜய் மீது அதிகப்படியான விமர்சனங்களை முன்வைத்தார். மேடைக்கு மேடை விஜயையும், அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால், இதுதொடர்பாக தவெக தலைமை பெரிய அளவில் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தது. இதையடுத்து இதர பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி வந்த சீமான், தற்போது மீண்டும் தவெக மீதான தாக்குதலை தொடங்கியுள்ளார். இதையடுத்து, திமுக கொடுத்த பணிகளை சீமான் கனகச்சிதமாக தொடங்கிவிட்டார் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ஸ்டாலின் உடன் சந்திப்பு:
காரணம், முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மறைவுக்கு கூட, சீமான் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தான், அண்மையில் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்துவின் மறைவை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிற்கே சென்று, சீமான் இரங்கல் தெரிவித்தார். இது வெறும் அரசியல் நாகரீக சந்திப்பு என கூறினாலும், பல அரசியல் கணக்கீடுகள் இருப்பதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், ஆளும் எதிர்க்கட்சிக்கான போராக இல்லாமல், திடீரென மாநில அந்தஸ்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒரு வயதே ஆன தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக போரை அறிவித்துள்ளதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
விஜயை குறிவைக்கும் திமுக
திமுக தான் தனது நேரடி எதிரி என விஜய் நேரடியாக அறிவித்தாலும், அவரது விமர்சனங்களுக்கு பதிலடி தருவதை ஆளுங்கட்சியினர் பெரும்பாலும் தவிர்த்தே வந்தனர். ஆனால், காலப்போக்கில் விஜய் முன்னெடுத்த தீவிரமான திமுக எதிர்ப்பு காரணமாக, அவர் மீது திமுகவின் ஐடி விங் காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து கடுமையாக சாடத்தொடங்கின. உதயதிக்கு போட்டியாக விஜய் உருவெடுக்கக் கூடாது என்பதில் தீவிரமாக களமாடி வருவதாகவும் தெரிகிறது.
”எதிரிக்கு எதிரி நண்பன்”
இதனிடையே, விஜயின் வருகையானது முதலில் சீமானின் பலமாக உள்ள இளைஞர்களின் வாக்கு வங்கியை உடைக்கக் கூடும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனால் தனது இருப்புக்கே பாதிப்பு வந்துவிடுமோ என்பதே சீமானின் அச்சமாக உள்ளதாம். நாதகவில் நிலவும் உட்கட்சி குழப்பங்களும் இதற்கு காரணமாம். இதனால் தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல, விஜயை ஒழித்துகட்ட திமுக மற்றும் சீமான் சேர்ந்து பயணிக்க தொடங்கியுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இல்லையெனில் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பாமல், தவெக உடன் போர் என அறிவிப்பாரா? என கேள்வி எழுப்புகின்றனர். இதுபோக சினிமாவா? சிந்தாந்தமா? என சவால் விடும் சீமானே, முதலில் சினிமாக்காரர் தான் என்பதை மறந்துவிட்டு அவர் பேசி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.





















