கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் காதலனுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த தனது நான்கரை வயது மகளை பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்த அபிராமி வழக்கில் தீர்ப்பு வந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோல கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற கோர சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
பெண் குழந்தை உயிரிழப்பு:
கோயம்புத்தூரில் அமைந்துள்ளது இருகூர். இங்கு வசித்து வந்தவர் தமிழரசி. இவருடைய மகள் தமிழரசி. தமிழரசிக்கும் அவரது கணவர் ரகுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், தமிழரசி தனது மகள் அபர்ணாஸ்ரீயுடன் சேர்ந்து தனியாக இங்கு வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென நான்கரை வயதே ஆன அவரது குழந்தை உயிரிழந்தது. இது அக்கம்பக்கத்தினர் உள்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழரசியிடம் விசாரணை நடத்தினர். அவர் குழந்தை அழுது காெண்டே இருந்ததால் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாக அவர் கூறினார்.
கள்ளக்காதல்:
தமிழரசி கூறிய தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் இன்னும் அவர்களது விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். கணவரை விட்டு தனியாக வசித்து வந்த தமிழரசி கட்டிட வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அவ்வாறு கட்டிட வேலைக்குச் செல்லும்போது அவருக்கும், கட்டிட வேலைக்கு வந்த வசந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வசந்தை காதலித்து வந்த தமிழரசி அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதனால், வசந்திடம் தனது ஆசையை அவர் தெரிவித்துள்ளார்.
கழுத்தை நெரித்துக் கொலை செய்த தாய்:
ஆனால், வசந்த் குழந்தை இல்லாமல் வந்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தனது வாழ்க்கைக்கு தடையாக தனது குழந்தை இருப்பதால் தனது குழந்தையை தீர்த்துக்கட்ட தமிழரசி முடிவு செய்துள்ளார். இதனால், பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார்.
இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, தமிழரசி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், கொலை செய்யத் தூண்டியதாக வசந்தையும் போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற கள்ளக்காதல் விவகாரங்களால் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த அபிராமி என்ற பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலனுக்காக தான் பெற்ற 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தப்பியோடியபோது போலீீசார் அவரை கைது செய்தனர். அப்போது, அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த அபிராமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வாழ்நாள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது.





















