H. ராஜாவை கண்டித்து நாளை போராட்டம்.. அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்!
ராகுல் காந்தி குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தரம் தாழ்ந்த பேசியதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்:
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜாவின் தரம் தாழ்ந்த பேச்சைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் நாளை (17.09.2024) செவ்வாய்க்கிழமை, சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் எதிரில் மாலை 4.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
"உங்களுக்கு அருகதை இல்ல"
"விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் சிறைவாசம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழித்து பேசுவதற்கு எச். ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பா.ஜ.க.வினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.
இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜிவ்காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்" என்றும் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
இதையும் படிக்க: Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?