Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் நேரில் சந்தித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க.வும், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதில், வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய அளவில் சவால் அளிக்கும் கட்சியாக அ.தி.மு.க. மட்டுமின்றி தவெக-வும் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலையம்:
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியிருந்தாலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவை பின்னடைவாக உள்ளது. குறிப்பாக, பரந்தூர் விமான நிலைய விவகாரம் தி.மு.க. அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் அமைய உள்ள இந்த புதிய விமான நிலையம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வோய், தண்டலம், மடப்புரம், தோடூர், சிங்கிலிபாடி, குணகாரப்பாக்கம், இடையர்பாக்கம், அக்கமபுரம், ஏகானபுரம், மகாதேவி மங்கலம் ஆகிய 13 கிராமங்கள் முழுவதும் அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது.
தொடர் போராட்டம்:
இதனால், இந்த கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு தங்கள் வாழ்விடங்களுக்கும், வேலைக்கும் மாற்று ஏற்பாடுகளை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தாலும், 3 மடங்கு இழப்பீடு தொகை வழங்குவதாக கூறினாலும் தங்கள் பூர்வீக இடங்களை விட்டுச் செல்ல பலரும் மறுத்து வருகின்றனர். இதனால், பல மாதங்களாக இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த விவகாரத்தில் மக்கள் தொடர்ந்து போராடி வருவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் ஏற்கனவே சந்தித்திருந்தனர்.
களத்தில் விஜய்:
இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதியதாக களமிறங்கியுள்ள விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை இன்று சந்தித்துள்ளார்.. இதனால், பரந்தூர் விமான நிலைய விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பரந்தூர் விமான நிலைய விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு அழுத்தம் தர திட்டமிட்டுள்ளனர்.

