Online Rummy: சட்டப்பேரவையில் பேசிய ஓபிஎஸ்..! எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ்! - சபாநாயகரின் சபாஷ் விளக்கம்!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் முழுமனதாக வரவேற்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில் கட்சிக்கு ஒருவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதன்படி அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதிமுக ஆன்லைன் தடை சட்ட மசோதாவை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தொடர்பாக அதிமுக சார்பில் முழுமனதாக வரவேற்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அதில், விவாதமின்றி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கலாம் என தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், கட்சிக்கு ஒருவர் என கூறிவிட்டு ஏன் மற்றொருவரை பேச அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, “முக்கியமான மசோதா என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்ற ரீதியில் பேச வாய்ப்பளித்தோம். வேறு நோக்கம் கற்பிக்க வேண்டாம், அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்கையில் அமர வேண்டும்” என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக ஆன்லைன் தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.