Jai Bhim Issue: ஜெய் பீம் விவகாரம்: அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய வன்னியர் சங்கம்!
'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்' . இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெய் பீம்' படம் வெளியான முதல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், ஒரு குறிப்பிட்ட நபரையும் அவமானம் செய்யப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
மேலும், இதற்கான விளக்கத்தை நடிகர் சூர்யா தரவேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இதற்கான பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், ”மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், 'அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது' என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.
ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், 'பெயர் அரசியலால்' மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.
சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @draramadoss அவர்களுக்கு… #JaiBhim pic.twitter.com/tMAqiqchtf
— Suriya Sivakumar (@Suriya_offl) November 11, 2021
இந்தநிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வன்னியர் சங்கம் அனுப்பிய அந்த நோட்டீஸில், படத்தில் இடம் பெற்றிருந்த அக்னி குண்டத்தை அகற்ற வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் ₹5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வன்னியருக்கு எதிராக தவறான தகவல்களை இனிமேல் பரப்ப கூடாது என்று தெரிவித்து படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.