மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி
நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதுவரை மேட்டூரில் தண்ணீருக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேட்டூரில் இருந்து உபரிநீர் திறக்கும் பகுதியில் சிக்கிக்கொண்ட நாயை மீட்கும் பணி ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது.
தண்ணீரில் சிக்கிய நாய்:
மேட்டூர் அணை கடந்த 30 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் அழைத்து வரும் நீர் முழுவதுமாக மேட்டூர் அணை உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அப்போது முதல் கட்டமாக ஒரு லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இந்த நிலையில், உபரி நீர் செல்லும் 16 கண் மதகு அருகே உள்ள சிறிய மண் திட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. இரண்டு நாட்களுக்கு பின்னர் பொதுமக்கள் கண்டுபிடித்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
ட்ரோன் மூலம் உணவு:
புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பெயரில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உடனடியாக நாய்க்கு உணவு அளிக்க உத்தரவிட்டார். அதன்படி தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மூலம் நாய்க்கு பிரியாணி, பிஸ்கட், இறைச்சிகளை உணவாக வழங்கினர். தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் நாயை நீக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆறாவது நாளாக இன்றும் நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர். இருப்பினும் நாய்க்கு தேவையான உணவுகள் ட்ரோன் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. நாய்க்கு தீயணைப்பு வீரர்கள் வழங்கப்படும் உணவுகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் சிலரும் ட்ரோன் மூலம் நாய்க்கு தங்களால் முடிந்த உணவை வழங்கி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் நாயை மீட்கும் பணியில் பலமுறை ஈடுபட்ட போதும், நீர்வரத்து வேகமாக இருப்பதால் நாயை மீட்க முடியாமல் திரும்பினர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேட்டூர் அணையில் தண்ணீருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க உத்தரவிட கோரி அவசர பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேசிய பேரிடர் மீட்பு குழு நாயை மீட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது அரசு தரப்பில், நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. நாய்க்கு ட்ரோன் மூலம் உரிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்க தேவையில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாயை மீட்க கோரிக்கை:
நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதுவரை மேட்டூரில் தண்ணீருக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர் படிப்படியாக குறைந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் நாய் மீட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாய்க்கு ட்ரோன் மூலம் உணவு வழங்குவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் உடனடியாக மேட்டூரில் சிக்கியுள்ள நாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.