கடனை கட்டிய பிறகும் பத்திரம் தர மறுப்பு...! 7 ஆண்டுகளாக அலைக்கழிப்பு - கூட்டுறவு வீட்டுவசதி ஆணைய மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய உத்தரவு
’’கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கம் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிவாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை செலவு மற்றும் பின் வட்டியுடன் செலுத்த உத்தரவு’’
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கத்தில் தனது வீட்டு மூல பத்திர அசல் ஆவணத்தை வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை அவர் உரிய முறையில் முழுமையாக வட்டியுடன் செலுத்திய பின்னரும், அவருக்கு அவர் அடகு வைத்து கடன் பெற்ற அசல் ஆவணத்தை திருப்பி வழங்காமல் நல்ல ஒட்ட வீட்டுவசதி வாரிய கடன் சங்க நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஸ்ரீநிவாசன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் மனுதாரருக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கம் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிவாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை செலவு மற்றும் பின் வட்டியுடன் செலுத்த வேண்டும். மேலும் அவருடைய அடமானம் வைத்த அசல் ஆவணத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதனை அதிகாரிகள் ஆறு வருடங்கள் கடந்தும் கூட இன்று வரை செயல்படுத்தாத காரணத்தினால் சீனிவாசன் மீண்டும் நிறைவேற்று மனு ஒன்றை மாவட்டக் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சக்கரவர்த்தி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவில் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி ஆணைய மேலாண்மை இயக்குனர், தஞ்சாவூர் வீட்டு வசதி மண்டல துணை பதிவாளர், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக நன்னிலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சக்கரவர்த்தி பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் கடன் தொகையை முழுமையாக கட்டிய பிறகும் தனது அசல் ஆவணத்தை வாங்க முடியாமல் ஏழு வருடங்களாக அல்லல்பட்டு மன உளைச்சலால் தவித்துக்கொண்டிருக்கும் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசனுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அவரது அசல் ஆவணம் ஆகியவை திரும்ப கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.