Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Asia Cup 2025: ஆசியக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை சாம்பியன் பட்டம், வென்ற கேப்டன்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.

Asia Cup 2025: ஆசியக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்த உற்சாகத்தில், ஆசியக் கோப்பை மூலம் டி20 போட்டிகளுக்குள் இந்திய அணி திரும்ப உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசிய கணத்தில் உள்ள அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியானது, ஐசிசி போட்டிகளுக்கான ஒத்திகையாக கருதப்பட்டு ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்டில் மாற்றி மாற்றி நடத்தப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு 50 ஓவர்கள் போட்டியாக ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது. அதேநேரம், கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை ஒட்டி 20 ஓவர் எடிஷனில் நடந்த போட்டியை, இலங்கை அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிக முறையை ஆசிய கோப்பையை வென்ற அணிகள்
ஒட்டுமொத்தமாக அதிகமுறை ஆசிய கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில், 8 முறை சாம்பியன் பட்டம் வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. 6 முறை வென்ற இலங்கை இரண்டாவது இடத்திலும், வெறும் இரண்டு முறை மட்டுமே வென்ற பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதனிடையே, இந்தாண்டிற்கான ஆசிய கோப்பையில், முதல்முறையாக அணியை வழிநடத்தும் பல கேப்டன்கள் உள்ளனர். இந்த சூழலில் ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார் யார்? என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையை வென்ற கேப்டன்கள் (ஒருநாள் போட்டி)
- 1984 – இந்தியா | கேப்டன்: சுனில் கவாஸ்கர்
- 1986 – இலங்கை | கேப்டன்: துலீப் மெண்டிஸ்
- 1988 – இந்தியா | கேப்டன்: திலீப் வெங்சர்க்கார்
- 1990 – இந்தியா | கேப்டன்: முகமது அசாருதீன்
- 1995 – இந்தியா | கேப்டன்: முகமது அசாருதீன்
- 1997 – இலங்கை | கேப்டன்: அர்ஜுனா ரணதுங்கா
- 2000 – பாகிஸ்தான் | கேப்டன்: மொயின் கான்
- 2004 – இலங்கை | கேப்டன்: மார்வன் அதபத்து
- 2008 – இலங்கை | கேப்டன்: மஹேல ஜெயவர்தன
- 2010 – இந்தியா | கேப்டன்: எம்.எஸ். தோனி
- 2012 – பாகிஸ்தான் | கேப்டன்: மிஸ்பா-உல்-ஹக்
- 2014 – இலங்கை | கேப்டன்: ஏஞ்சலோ மேத்யூஸ்
- 2018 – இந்தியா | கேப்டன்: ரோஹித் சர்மா
- 2023 – இந்தியா | கேப்டன்: ரோஹித் சர்மா
இந்தியாவின் ஆதிக்கம்:
முதல்முறையாக ஆசியக்கோப்பை நடத்தப்பட்டபோது இந்திய அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது. அதைதொடர்ந்து, தற்போது நடப்பு சாம்பியனாகவும் உள்ளது. முகமது அசாருதீனுடன் இணைந்து ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் 7 வெற்றிகள் 5 வெவ்வேறு தலைவர்களின் கீழ் வந்துள்ளன. அதில் சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோரின் பெயர்களும் அடங்கும்.
ஆசியக் கோப்பையை வென்ற கேப்டன்கள் (டி20 போட்டி)
- 2016 – இந்தியா | கேப்டன்: எம்.எஸ். தோனி
- 2022 – இலங்கை | கேப்டன்: தசுன் ஷனகா
இந்தியாவும் இலங்கையும் டி20 வடிவத்தில் விளையாடிய இரண்டு எடிஷன்களை வென்றுள்ளன. ஒருநாள் போட்டிகளைப் போலவே, எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 தொடக்க எடிஷனையும் வென்றது. ஆசியக் கோப்பை போட்டியின் டி20 மற்றும் ஒருநாள் எடிஷன்கள் இரண்டையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே ஆகும்.



















