200 கோடியை நெருங்கும் Lokah.. டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டிய கல்யாணி பிரியதர்ஷன்.. மாஸ் ஹிட்!
கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள லோகா சாப்டர் ஓன் சந்திரா திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி வெளியான லோகா சாப்டர் ஒன் சந்திரா திரைப்படம் மலையாள சினிமாவில் புதிய புரட்சியை செய்துள்ளது. ஹீரோ சென்ட்ரிக் படங்களுக்கு இணையாக இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், நஸ்லன், சாண்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளனர். இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.
வசூலை அள்ளி குவிக்கும் லோகா
ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான லோகா திரைப்படம் உலகளவில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹீரோ சென்ட்ரிக் படங்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு இணையாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள லோகா படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்துள்ள டாப் நடிகைகளான சமந்தா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எட்டாத 100 கோடி வசூலை எட்டிய தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். தென்னிந்திய சினிமாவில் சோலோ ஹீரோயின் சப்ஜெக்டில் வெளிவந்து ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ள முதல் படம் இதுதான். இப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகை ஆலியா பட் வியந்து பாராட்டினார்.
டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டிய கல்யாணி
இந்நிலையில், லோகா திரைப்படம் இதுவரை 175 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரூ200 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என மலையாள சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. உலகளவில் இப்படம் நாளுக்கு ரூ.30 கோடி வரை வசூலை அள்ளி வருவதாகவும் கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியோடு உருவாகியிருக்கும் இக்கதை ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. ரத்தக்காட்டேறியாக வரும் ஹீரோயினுக்கான லாஜிக் காட்சிகளும் பிரமாதப்படுத்தியுள்ளனர். இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், லோகா சாப்டர் ஓன் சந்திரா படம் 5 பாகங்களாக வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் இது ஒரு பிரம்மாண்டம் என்றே சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.





















