Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் பெருஞ்சுவராக திகழ்ந்தவர் புஜாரா. பல போட்டிகளில் இந்திய அணியின் தூணாக விளையாடி வெற்றி பெற வைத்தவர்.
ஓய்வு பெற்றார் புஜாரா:
தொடர்ந்து அணியில் இடம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதுவரை புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் 176 இன்னிங்சில் ஆடி 7 ஆயிரத்து 195 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 206 ரன்கள் ஒரு இன்னிங்சில் எடுத்துள்ளார். 35 அரைசதங்கள், 19 சதங்கள் மற்றும் 3 இரட்டை சதங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசியுள்ளார். 5 ஒருநாள் போட்டியில் ஆடி 51 ரன்கள் எடுத்துள்ளார். 30 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 390 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த புஜாரா முதன்முதலில் 2010ம் ஆணடு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதன்பின்பு, 2013ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
அடுத்த டிராவிட்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியைத் தாங்கிப் பிடிக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தபோது, புஜாரா அவரது இடத்தில் ஆடத்தொடங்கினார். அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் டிராவிட்டின் சாயலாகவே புஜாரா ஆடினார். களத்தில் பொறுமையாக நின்று எதிரணி பந்துவீ்ச்சாளர்களை விரக்தியடைய வைப்பதில் டிராவிட்டைப் போலவே புஜாராவும் அசத்தலாக ஆடினார்.
கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் ஆடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியே புஜாரா ஆடிய கடைசி போட்டி ஆகும். அந்த போட்டியில் புஜாரா முதல் இன்னிங்சில் 14 ரன்களும், 2வது இன்னிங்சில் 27 ரன்களும் எடுத்தார்.
7 நாடுகளுக்கு எதிராக சதம்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 சர்வதேச நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் ஆடியுள்ளார். இதில், ஆப்கானிஸ்தான் தவிர அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் விளாசியுள்ளார். இதில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு எதிராக ஆதிக்கம்:
அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 27 டெஸ்ட் போட்டிகளும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளும் ஆடியுள்ளார். விராட் கோலி போல புஜாராவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி வருகிறார். 25 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடி 5 சதங்கள், 11 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 74 ரன்கள் எடுத்துள்ளார்.
அதேபோல, இங்கிலாந்திற்கு எதிராக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள் 7 அரைசதங்களுடன் 1778 ரன்கள் எடுத்துள்ளார். 176 இன்னிங்சில் ஆடியுள்ள புஜாரா 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 12 முறை டக் அவுட்டாகியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 863 பவுண்டரிகளை விளாசியுள்ள புஜாரா 15 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சராசரியாக 43.61 வைத்துள்ளார்.




















