“உடலை அடிக்கடி தொட்டு பேசுகிறார்...” அரசு மருத்துவ கல்லூரி மாணவிகளிடம் லேப் டெக்னீசியன் செய்த சேட்டைகள்
விசாரணையில் தங்கள் உடலை அடிக்கடி தொட்டு பேசுவதாகவும், உங்களுடன் படிக்கும் பிற மாணவிகளின் செல்போன் என்னை தர வேண்டும் என்று லேப் டெக்னீசியன் கேட்பதாகவும் மாணவிகள் புகார்.

சேலம் மஜ்ரா கொல்லப்பட்டியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு, முதுகலை மருத்துவ படிப்பு, நர்சிங் படிப்பு, பாரா மெடிக்கல் படிப்பு ஆகியவற்றை மாணவ, மாணவிகளுக்கு பயின்று வருகிறது. இதில் பாரா மெடிக்கல் படிப்பு பிரிவில் டிப்ளமோ மருத்துவ ஆய்வக டெக்னீசியன் பாடப்பிரிவில் மாணவிகளுக்கு அங்கு பணிபுரிந்து வரும் லேப் டெக்னீசியன் வேலு என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இந்த பிரிவில் படிக்கும் மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் தேவி மீனாளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாக கமிட்டி தலைவர் மருத்துவர் சுபா தலைமையில் விசாக கமிட்டி குழுவினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மாணவிகளிடமும் லேப் டெக்னீசியன் வேலுவிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தங்கள் உடலை அடிக்கடி தொட்டு பேசுவதாகவும், உங்களுடன் படிக்கும் பிற மாணவிகளின் செல்போன் என்னை தர வேண்டும் என்று லேப் டெக்னீசியன் கேட்பதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனாளிடம் ஆகியோரிடம் விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லேப் டெக்னீசியன் வேலுவை சஸ்பெண்ட் செய்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் தேவி மீனாள் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், லேப் டெக்னீசியன் வேலு வேறு மாணவிகளிடம் ஏதேனும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது குறித்து தொடர்ந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சேலம் அரசு மோகன் குமார்மங்கலம் மருத்துவமனை மருத்துவர் கல்லூரி முதல்வர் தேவி மீனாளிடம் கேட்டபோது, லேப் டெக்னீசியன் மீது புகார் வந்தது. அதனை விசாரிக்க விசாக கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பேரில் லேப் டெக்னீசியன் வேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

