ADMK - BJP: பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகளை தரணுமா..? கொந்தளிக்கும் அ.தி.மு.க. தலைவர்கள்..!
தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்வதை இலக்காக வைத்துள்ளோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெல்வதை இலக்காக வைத்துள்ளோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதற்கு அதிமுக சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
அமித்ஷா பேச்சால் சர்ச்சை:
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாத காலம் நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் வியூகம் அமைக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார்.
இதனை அடுத்து, சென்னை கோவிலம் பாக்கத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பேசியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். இந்த அதிமுக வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார்
மத்திய உள்துறை அமித்ஷா கருத்து பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”ஒரு கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பயணம் மேற்கொண்டு வருகிறார் அமித் ஷா. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை முடிவு செய்வது அதிமுக தான். தொகுதி ஒதுக்கீடு குறித்து குழு அமைத்து அதற்கு முடிவு எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் தொகுதி குறித்து தற்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை” என்றார்.
மேலும், ”தொகுதி ஒதுக்கீடு குறித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கடைபிடித்த வழிமுறையே பின்பற்றப்படும். தொகுதிகள் பற்றி கேட்பது அவர்களது உரிமை. ஆனால் அதற்கு கட்சி பாதிக்காத வகையில் தான் முடிவு எடுப்போம். கட்சி ஒதுக்கீடு குறித்து அதிமுகவின் நலன் பாதிக்காத வகையில் எந்த ஒரு முடிவும் இருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செம்மலை
”வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இப்போதே முடிவு செய்ய முடியாது. 25 தொகுதிகள் இலக்கு என்ற பாஜக கூறுவது இறுதி முடிவாக இருக்காது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து தேர்தலிலும் கூட்டணியில் அதிமுக தான் தலைமை தாங்கும். 10 மாத இருக்கும் முன்பே இந்த தொகுதி தான் இவர்களுக்கு என்று பாஜக கூறுவது இறுதி முடிவாக இருக்காது” என்று செம்மலை தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவின் இந்த பகிரங்க அறிவிப்பு, அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா கூறியபடி, 25 தொகுதிகளை அதிமுக கொடுக்க ஒப்புக் கொள்ளுமா? என்பதெல்லாம் பெரும் கேள்வியாக உள்ளது. அதுவும் பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவுக்கு 25 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுப்பாரா? அல்லது என்ன நடக்கும்? என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.