TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
TN Governor SC: நிலுவையில் உள்ள 10 மசோதாக்களையும் ஆளுநர் ஒப்புதல் பெற்றதாக உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

TN Governor SC: தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் மார்ச் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநருக்கு எதிரான வழக்கு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட, அரசின் 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க, இருதரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நீதிபதிகளும் பல அதிரடி கருத்துகளை குறிப்பிட்டனர். தொடர்ந்து கடந்த 10ம் தேதி இருதரப்பு வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் கேள்வி:
அதேநேரம், ஆளுநருக்குரிய சட்டப்பூர்வ அதிகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். உச்சநீதிமன்றம் எழுப்பிய 12 கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த தமிழக அரசு கோரிக்கை
தமிழக அரசின் எழுத்துப்பூர்வ வாதத்தில், அரசியல் சாசன பிரிவு 200ன் படி மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்று விரிவான அரசியல் சாசன அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது. அதாவது மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என அரசியல் சாசனத்தின் பிரிவு 200 கூறுகிறது. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆளுநருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் எந்தவொரு தனிப்பட்ட முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அரசியல் சாசன பிரிவு 142ன்படி உச்சநீதிமன்றத்துக்கு உள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படாத காரணத்தால், குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பிய மசோதாக்கள், பல்கலைக்கழக மசோதாக்கள் உள்பட 10 மசோதாக்களையும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கருதுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்"என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆளுநர் தரப்பு வாதம்:
ஆளுநர் தரப்பு முன்வைத்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில், “அரசியல் சாசனம் பிரிவு 200-ல் ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமை அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதன்படி பேரவை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. அதேபோல அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்டரீதியாக முழுஅதிகாரம் உள்ளது. சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை நிறுத்தி வைத்தாலே அது தானாக செயலிழந்து விட்டதாகவே அர்த்தம். அந்த மசோதா எதற்காக நிறுத்திவைக்கப்பட்டது என்பதற்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் தமிழக ஆளுநருக்கு எதிரான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. ஆனால் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்பது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் செயல்' என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

