டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை விமான நிலையத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கே சென்று சந்தித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி சந்திப்பு:
சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு இன்று உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதையடுத்து, புழல் சிறையில் இருந்து அவர் நேற்று வெளியே வந்தார். அவருக்கு, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவரை திமுக மூத்த தலைவர்கள் தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்கள் வரை, பலரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக, செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதியை சந்தித்து பேசினார்.
கடந்த 2011-1016 ஆம் ஆண்டு காலத்தில் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றிருப்பவதாகவும் பணம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏதும் தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
மீண்டும் அமைச்சர் பதவியா?
அமலாக்கத் துறை Enforcement Case Information Report (ECIR)-ன் படி 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ப்பட்டது. அங்கு பிணை மனு தள்ளுபடி அவரது தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பலமுறை பிணை மறுக்கப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, அவருக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அவருக்கு மீண்டும் வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.