Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக திமுக எம்.பி திருச்சி சிவா களமிறக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் யார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்

குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைப்பெற உள்ளது, இதற்காக பாஜக கூட்டணியில் தமிழரான சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் திமுக எம்.பி திருச்சி சிவா களமிறக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:
குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது.
திமுகவிடம் ஆதரவு கேட்டு நெருக்கடி:
தமிழரான சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரும் படி தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் முதல்வர் முக ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தார், அதே போல் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முதல்வரிடம் ஆதரவளிக்கும் படி பேசியதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடியானது அதிகரித்து வருகிறது.
களமிறக்கப்படும் திருச்சி சிவா?
இந்த நிலையில் இந்திய கூட்டணி சார்பில் திமுக எம்.பியும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கட்சி தமிழரான சி.பி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்த நிலையில் இந்தியா கூட்டணியும் தமிழர் ஒருவரை களமிறக்கினால் தான் சரியாக இருக்கும் என்று திருச்சி சிவாவை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
யார் இந்த திருச்சி சிவா?
வழக்கறிஞரான திருச்சி சிவா திமுகவின் மிக முக்கிய மூத்த தலைவரான 1970களில் இருந்து திமுக உறுப்பினராக சேர்ந்தார், 1976 ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அதன் பின் 1978 ஆம் ஆண்டு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பொறுப்பும் வகித்தார். இதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் 2002, 2007,2014 மற்றும் 2020 ஆண்டுகளிலும் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரை பொறுத்தவரையில் சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் என்று பாராட்டபடுவார். மேலும் பல தனிநபர் மசோதக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சிறப்பும் இவருக்கு உண்டு. குறிப்பாக 2014 ஆன் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் மசோதாவை கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருந்தார், இது 45 ஆண்டுகளில் தனி நபர் ஒருவரால் மேல் சபையில் கொண்டுவரப்பட்ட முதல் தனிநபர் உறுப்பினர் மசோதவாகும்.
மேலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் உறுதியாக நின்று குரல் கொடுத்துள்ளார், இருப்பினும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















