பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
எக்காரணத்தினை முன்னிட்டும், இந்த குழுவிற்கு கால நீட்டிப்பு கேட்கக் கூடாது என்பதோடு, அரசு நிர்ணயம் செய்துள்ள காலக்கெடுவான 30-09-2025க்குள் அறிக்கையினை அரசிடம் வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம், தமிழ்நாடு தலைமைச் செயலகச் செயகம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓட்டுமொத்த ஊழியர்-அரசின் பங்களிப்பு, வட்டித்தொகை நிலை
தமிழ்நாட்டின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது இந்தியாவில் எந்வொரு மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். இதனை எந்த மாநில அரசோடும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில், ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளப்படவில்லை. ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகையும் அரசின் பங்களிப்பும் வட்டியும் சேர்த்துமுழுமையாக தமிழ்நாடு அரசிடம்தான் பாதுகாப்பாக உள்ளது.
ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத காரணத்தினால், தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை. அதோடு மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்தினால் அரசின் பங்களிப்பு சதவிகிதம் என்பது 18.5 விழுக்காடு என உயரும். ஏற்கனவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் 10 விழுக்காடு பங்களிப்பு என்பதே ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
மேலும், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தின் நிதியினை நிர்வகிக்க நிதி மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஊக வர்த்தகம் ஆகும். கடந்த கால பங்கு வர்த்தக தரவுகளைப் பார்க்கும்போது, ஊழியர்களின் தொகையானது எந்த வகையிலும் நிலையான வருமானம் & வட்டி தரும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அதோடு மட்டுமல்லாமல், செலுத்திய தொகைக்கும் பாதுகாப்பு-திரும்பக் கிடைக்கும் என்பதற்கான உறுதியும் உத்தரவாதமும் இல்லை.
2025-2026 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில், 31-03-2025 அன்றைய நிலவரப்படி, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் 6,24,140 சந்தாதாரர்களும் பணியாளர்- அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.84,507.27 கோடி இருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை பரிசீலிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. ஒன்றிய அரசினால் தற்போது 1-4-2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பணி புரிந்து, பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், தங்களது பங்களிப்பு (10ரூ அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி, அதற்கான வட்டி) மற்றும் அரசின் பங்களிப்பு (18.5ரூ அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி, அதற்கான வட்டி) ஆகியவற்றின் இறுதித்தொகையில் 10ரூ மட்டுமே திரும்பப் பெறும் நிலை உள்ளது.
இத்திட்டம் என்பது, ஓய்வூதியம் வழங்குகிறோம் என்ற ஒன்றைச் சொல்லி, மொத்தமாக 25 முதல் 30 ஆண்டுகள் தங்களது சேமிப்பினை இழக்கவும் கைவிடவும் செய்யும் போக்குதான்.
தமிழ்நாடு அரசினைப் பொறுத்தவரையில் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத நிலையில், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிசீலிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. எந்த வகையிலும், இத்திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்த இயலாது. ஏற்கனவே நாங்கள் தெரிவித்ததைப் போல, 18.5ரூ என அரசின் பங்களிப்பினை உயர்த்துவதன் மூலமாக, இது முழுக்க முழுக்க பெரு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் சாதகம் செய்யக்கூடிய போக்குதான்.
குழு அரசிற்கு பரிந்துரைக்க வேண்டிய அம்சங்கள்
இந்த நிதியினை பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்றிவிட்டு, 1-4-2003க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நிர்வகிக்கப்படும் பொது வருங்கால சேமநல நிதியில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்தில் உள்ள ஊழியர்களையும் சந்தாதாரர்களாகச் சேர்த்திட வேண்டும். இந்த சேமநல நிதியின் கீழ் உள்ள அனைத்துச் சலுகைகளையும் ஊழியர்களுக்கு நீட்டித்திட வேண்டும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978ன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இந்த ஓய்வூதிய விதிகளின் அடிப்படையிலான அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்கப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், இவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் அனைத்துமே கருவூல கணக்குத் துறையின் மூலமே வழங்கப்பட வேண்டும்.
பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.
ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வுபெற்ற / பணியின்போது மரணமடைந்த / பணி ஓய்விற்குப் பின்னர் மரணமடைந்த ஊழியர்களுக்கு இறுதித்தொகையினை வழங்கி விட்டோம் எனக் காரணம் காட்டி, ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மறுக்கப்படக்கூடாது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் ஷரத்து 14ன் அடிப்படையில் அந்த ஊழியர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கி அடிப்படை உரிமையினை உறுதி செய்திட வேண்டும்.
குழுவிற்கு கால நீட்டிப்பு கேட்கக் கூடாது
எக்காரணத்தினை முன்னிட்டும், இந்த குழுவிற்கு கால நீட்டிப்பு கேட்கக் கூடாது என்பதோடு, அரசு நிர்ணயம் செய்துள்ள காலக்கெடுவான 30-09-2025க்குள் அறிக்கையினை அரசிடம் வழங்க வேண்டும்.






















