USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India Tariff: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது மட்டும் கூடுதல் வரி விதித்தது ஏன்? என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

USA India Tariff: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும் சீனா மீது மட்டும் கூடுதல் வரி விதிக்காதது ஏன்? என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விவகாரம்:
பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான எண்ணெய் வாங்கும் சீனாவை விடுத்து, அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவின் மீது மட்டும் 50 சதவிகித வரி விதித்தது ஏன்? என்பது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கும் எண்ணெய் சுத்திகரித்து செய்யப்பட்டு பெரும்பாலும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில் சீனாவின் மீது கூடுதல் வரி விதித்தால் அது சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலையை உயர்த்தும்” என தெரிவித்துள்ளார்.
”உலகளாவிய பிரச்னையாக மாறும்”
சீனா மீது கூடுதல் வரி விதிக்காதது குறித்து பேசுகையில், “ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெயை சீனா வெறும் சுத்திகரிப்பு மட்டுமே செய்கிறது. பிறகு ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் மீது கூடுதல் வரி விதித்தால், அவர்களிடமிருந்து வாங்கும் நாடுகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். அல்லது மாற்று வாய்ப்பை எதையேனும் கட்டாயத்திற்கு தள்ளப்பட வேண்டி இருக்கலாம்” என மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் ஐரோப்பிய நாடுகள், பெய்ஜிங்கிற்கு எதிரான எந்தவொரு தண்டனை நடவடிக்கைகளுக்கும் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். அதாவது உலக நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சீனாவின் மீது கூடுதல் வரி விதிக்கப்படவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மீது கூடுதல் வரி?
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்குவதற்காக ஐரோப்பாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்த தொடர்ச்சியான கேள்விக்கு, "ஐரோப்பா மீதான பொருளாதாரத் தடைகள் பற்றி எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு நிச்சயமாக தாக்கங்கள் உள்ளன. அந்த நிலையை அடைய எங்களுக்கு உதவுவதில் அவர்கள் இங்கு மிகவும் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது பாரபட்சம்..
இந்தியாவை காட்டிலும் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெயை வாங்கும், சீனா மீது ஏன் அமெரிக்க வரி விதிக்கவில்லை என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக நீண்டு வருகிறது. இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வியையே காட்டுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில்தான், சர்வதேச தாக்கம் காரணமாகவே சீனா மீது கூடுதல் அபராத வரி விதிக்கவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயை இந்தியா உள்நாட்டு தேவைக்காகவே பெரும்பாலும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.





















