OPS - Sabareesan Meet: என்னடா நடக்குது இங்க? முதல்வர் மருமகனை சந்தித்த ஓபிஎஸ்; தோனிக்கு போட்டியா? - கலாய்க்கும் அதிமுக வட்டாரம்!
அதிமுகவை சேர்ந்த பலர் ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பக்கம் பக்கமாக பேசி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது. இந்த சந்திப்புதான் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சோகம்தான்.
இந்த சந்திப்பை விட மற்றொரு சந்திப்புதான் நேற்றுமுதல் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதுதான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்திப்பு. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பலர் ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பக்கம் பக்கமாக பேசி வருகின்றனர். இது உண்மை என்றது போலவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சபரீசனை, ஓபிஎஸ் சந்தித்து நீண்ட நேரம் தனி அறையில் பேசியுள்ளார்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சில அரசியல் பிரபலங்கள், திமுகவில் பன்னீர்செல்வம் இணைவதற்கான முன்னோட்டம் என பின்னி எடுக்கின்றனர்.
திமுகவின் பி டீமா ஓபிஎஸ்..?
கடந்த ஓராண்டுக்கு மேலாக அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க, ஓ. பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டு விட்டார். இருப்பினும், இதை இப்படியே விடக்கூடாது என்று வழக்கு மேல் வழக்கு, வாய்தாக்கு மேல் வாய்தா என்று தொடர்கதையாக நீண்டு கொண்டே போகிறது. மேலும், யார் அதிமுக பக்கம் என்று அறிய திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றையும் ஓபிஎஸ் வெற்றிகரமாக நடத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் முதல் பல அரசியல் பிரபலங்கள் வரை ஓபிஎஸ் ஒரு திமுக ஆதரவாளர் என்று கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு காரணம், திமுக அரசை பலமுறை ஒபிஎஸ் புகழ்ந்து பேசியதுதான். அப்படி என்ன என்று கேட்டால் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த போது வாண்டெடாக வந்து வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.
அதேபோல் பாரதியார் நினைவு நாள், சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து பேசியது என ஓபிஎஸ்ஸின் திமுக புகழாரம் பட்டியல் நீண்டு கொண்டே போனது. அதற்கு உறுதுணையாக திமுக அரசும் செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்தது. சட்டபேரவையின்போது சபாநாயகர் அப்பாவு, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஓபிஎஸ்ஸிடம் கருத்து கேட்டது, எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிமுகவினரையும் கதிகலங்க செய்தது. தொடர்ந்து, ஓபிஎஸ்ஸின் மகனான அதிமுக எம்.பி ரவீந்திரநாத் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதோடு, திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என பாராட்டினார். அவ்வளவுதான், ஒட்டுமொத்த அதிமுகவும் ஓபிஎஸ் பக்கம் திரும்பியது.
தொடர்ச்சியாக திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்த சூழலில்தான் ஓ பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மருகன் சபரீசனை சந்தித்தார். இவர்கள் சந்தித்து பேசிகொண்ட சில நிமிடங்களிலேயே, இவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுவதற்கு கண்டென்ட் கொடுத்தது.
இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதன் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் சிறிது நேரம் பேசினார். அப்போது, அதிமுக பற்றியும், தங்களது கட்சி நிலைமை என்னவென்று கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் தங்களது கற்பனைக்கு ஏற்றாற்போல் சிலவற்றை கிளப்பிவிட, இது மரியாதைக்குரிய சந்திப்பு மட்டும்தான் என ஓபிஎஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
கலாய்த்து தள்ளும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:
பூனைக்குட்டி வெளியே வந்தது...
— DJayakumar (@offiofDJ) May 6, 2023
*சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..* pic.twitter.com/MjDhDPKkpR
நேற்றைய இந்த சந்திப்பின்போது வெளியான புகைப்படம் மற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”பூனைக்குட்டி வெளியே வந்தது... *சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..*” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “தோனிக்கு பதிலாக அவரை கேப்டனாக்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஓபிஎஸ் சண்டையிட்டு வருகிறார்.” என பதிவிட்டு ஓபிஎஸ் பதவி ஆசை குறித்து சொல்லாமல் சொல்லி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஜெயக்குமார்.
எது எப்படி இருந்தாலும் ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு குறித்து இருவரிடம் இருந்தும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அவ்வாறு வெளிவந்தால் மட்டுமே இந்த சந்திப்புக்கான நோக்கம் என்ன? திட்டமிடப்பட்டதா? எதேர்ச்சையாக நடந்ததா என்பது குறித்து தெரியவரும்.. அதுவரை கட்சிக்காரர்களும் விமர்சகர்களும் கூறும் கதைகள் அனைத்தும் வெறும் விமர்சனங்களே...!