Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
USA Flight Fire: புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்.

USA Flight Fire: புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயணிகள் விமானத்தில் பற்றிய தீ:
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானத்தின் லேண்டிங் கியரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ பற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் விமான ஓடுபாதை அமைந்துள்ள இடத்தை கருநிறத்தில் மாற்றியது. இதனிடையே, விமானத்தில் இருந்த 173 பயணிகளும் அவசரகால வழியாக விமானத்தில் இருந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், ஒரே ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Passengers flee from a burning airplane on the tarmac at Denver International Airport. #Emergency #AmericanAirlines pic.twitter.com/Tx5moHSBlI
— Andhbhakts Official (@a_bhaktOff) July 27, 2025
நடந்தது என்ன?
AA - 3023 என்ற போயிங் 737 MAX 8 விமானம் மியாமி நோக்கி பயணிக்க தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை வேகமாக விமானத்தை சூழ தொடங்கியுள்ளது. இதனை கண்டதும் பயணிகள் அலறியுள்ளனர். உடனடியாக காற்று நிரப்பப்பட்ட பேக்கால் ஆன, அவசர காலத்திற்கான சாய்தளப்பாதை விமானத்தின் பக்கவாட்டில் திறக்கப்பட்டது. பயணிகள் ஒவ்வொருவராக அதில் சறுக்கியபடி கீழே வர, ஒரு சிலர் நிலைதடுமாறி ஓடுபாதையில் விழுந்துள்ளனர். சிலர் தங்களது குழந்தைகளை இறுக்கி பிடித்தபடி பதற்றத்துடன் அந்த பாதை வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விபத்திற்கான காரணம் என்ன?
பிற்பகல் 2.45 மணிக்கு ஓடுபாதைக்கு நகர்ந்தபோது விமானத்தில் தீ பற்றியுள்ளது. உடனடியாக விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டதாக அந்நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 5.10 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டயரில் ஏற்பட்ட பராமரிப்பு பிரச்னை காரணமாக விபத்து ஏற்பட்டதாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவமனம் விளக்கமளித்துள்ளது.
தொடரும் விமான விபத்துகள்:
டென்வர் விமான நிலையத்தில் விமானத்தில் தீ விபத்து ஏற்படுவது, கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாவது நிகழ்வாகும். கடந்த மார்ச் மாதம் டல்லாச் நோக்கி புறப்பட இருந்தே, இதே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 178 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அண்மையில் தான் இந்தியாவில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 260 பேரும் ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் சுமார் 50 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





















