Trump Zelensky: சண்டை வேணாமே..! மீண்டும் ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப், ”நாங்க இருக்கோம், அப்படியே..”
Trump Zelensky: வெள்ளை மாளிகையில் நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Trump Zelensky: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப்:
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனௌஇ முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க அதிபர் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் காரசாரமான கருத்துகள் பகிரப்பட்டதால், எந்தவிதமான சுமூக முடிவுகளும் எட்டப்படாமல், பேச்சுவார்த்தை வாக்குவாதமாக முடிந்தது. இந்நிலையில் தான், இரண்டு தினங்களுக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், தொலைபேசி வாயிலாக ட்ரம்ப் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் ஒரு மணி நேர தொலைபேசி வாயிலாக ட்ரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கி கோரிக்கை:
தொலைபேசி அழைப்பு தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவுடன் சேர்ந்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க தலைமையின் கீழ் நீடித்த அமைதியை அடைய முடியும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படிகளில் ஒன்று எரிசக்தி மற்றும் பிற உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அமெரிக்காவின் ராணுவ ஆதரவுக்கு, குறிப்பாக ஈட்டி ஏவுகணைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, வான் பாதுகாப்பு வளங்களையும் ஜெலன்ஸ்கி கோரினார்” என அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உரிமை கோரும் ட்ரம்ப்
அதேநேரம், “தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக, உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பை, குறிப்பாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது நண்பர்களைப் பாதுகாக்கவும் கூடிய வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவோடு பொருளாதார உறவைக் கொண்டிருப்பது ஓரளவு நன்மை பயக்கும்" என ட்ரம்ப் பேசியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமவள ஒப்பந்தம்:
அமெரிக்கா-உக்ரைன் கனிம ஒப்பந்தமும் விவாதிக்கப்பட்ட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா கனிம ஒப்பந்தத்திற்கு "அப்பால்" இருப்பதாகவும், அமைதி பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. போரின் போது உக்ரைனில் இருந்து காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டறிய இரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற ட்ரம்ப் உறுதியளித்தார். மேலும், ஐரோப்பாவிடம் இருந்து அதிக வான் பாதுகாப்பு உபகரணங்களை பெற உதவுவதாகவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் சொல்வது என்ன?
தனது சமூக வலைதள பதிவில் டிரம்ப் இந்த அழைப்பை "மிகவும் நல்லது" என்று விவரித்தார். "ரஷ்யா மற்றும் உக்ரைன் இரண்டையும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இணைப்பதற்காக அதிபர் புதினுடன்மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் அடிப்படையில் பெரும்பாலான விவாதங்கள் நடந்தன" என்று குறிப்பிட்டார். தொலைபேசி அழைப்பு "நேர்மறையானது", "வெளிப்படையானது" மற்றும் "மிகவும் அர்த்தமுள்ளதாக" இருந்தது என்று ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்தை புதின் நிராகரித்தாலும், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

