"வீணாய்ப்போன உணவை அம்மா உணவகத்தில் பரிமாறினர்" சர்ச்சையை கிளப்பிய திமுகவின் ஆர்.எஸ். பாரதி!
அம்மா உணவகத்தில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை உத்தரப் பிரதேச, பிகார்காரர்கள் சாப்பிடுகின்றனர் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகம் குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகத்தால் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயன்பெற்று வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அம்மா உணவகம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை திமுக தரப்பு மறுத்து வருகிறது. சமீபத்தில் கூட, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், அம்மா உணவகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், அம்மா உணவகம் குறித்து திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், "அம்மாவே(ஜெயலலிதா)) போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்..? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி தோசை சாப்பிட்ட எடப்பாடி கும்பல், ஏதோ... 150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தையெல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல் பேசி வருகின்றனர்.
வீணாய்போன உணவை ஜெயலலிதா அரசு அம்மா உணவகத்தில் பரிமாறியது. அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை இங்கிருக்கும் பிகார், உத்தர பிரதேசக்காரன் தான் மொத்தமாக சாப்பிடுறார்கள். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள்" என்றார்.
650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் நான்கு உணவகங்களும் செயல்படுகின்றன.
இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், பல்வகை சாதங்கள் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்குப் பகலிலும், 2 சப்பாத்திகள் பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மாநில அரசு மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் இதற்காக ரூ.300 கோடி செலவு செய்கின்றன.