மயிலாடுதுறை இளைஞர்களே! இந்திய ராணுவத்தில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! 'கேரவன் டாக்கீஸ்' விழிப்புணர்வு திட்டம்!
ராணுவத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு, வழிகாட்டும் கேரவன் டாக்கீஸ் சிறப்பு விளம்பர விழிப்புணர்வு வேன் மூலம் இந்திய ராணுவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளது.

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞர்களை ஊக்குவிக்கவும், வழிகாட்டவும், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் "கேரவன் டாக்கீஸ்" என்ற சிறப்பு விளம்பர வேன் மூலம் விரிவான விழிப்புணர்வுத் திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கேரவன் டாக்கீஸ்
இந்த "கேரவன் டாக்கீஸ்" வேன், பெரிய LED திரைகள், ஒலி அமைப்புகள் மற்றும் பன்மொழி ஆடியோ-விஷுவல் உள்ளடக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் சேருவதற்கான தகுதி அளவுகோல்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் ராணுவத்தின் சிறப்பு குறித்த காணொலிகள் இந்த வேன் மூலம் மக்களுக்குத் திரையிடப்படும். இது இளைஞர்களுக்கு இந்திய ராணுவம் குறித்த உண்மையான தகவல்களை வழங்குவதோடு, அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவும்.
திட்டத்தின் நோக்கம்
இந்த வேன், கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் சென்று, ராணுவ அதிகாரிகள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நேரடியாக உரையாடி, ஆட்சேர்ப்பு குறித்த பிரசுரங்களையும் விநியோகிக்கும். மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்களின் பெருமைமிக்க தற்காப்பு மரபுகளையும், ராணுவத்திற்கு அவர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில், இந்தத் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தின் விழிப்புணர்வையும், இந்திய ராணுவ சேர்க்கை நடவடிக்கைகளில் பங்கேற்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"கேரவன் டாக்கீஸ்" பயண விவரங்கள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, "கேரவன் டாக்கீஸ்" சிறப்பு விளம்பர வாகனம் ஜூலை 2, 2025 முதல் ஜூலை 6, 2025 வரை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பின்வரும் இடங்களில் பயணிக்கவுள்ளது.
ஜூலை 02, 2025:
- ஆறுபாதி கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி.
- வடகரை கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரி.
ஜூலை 03, 2025:
- திருநன்றியூர் கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி.
- உளுத்துக்குப்பை கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரி.
ஜூலை 04, 2025
- பெருஞ்சேரி கிராம மக்களுக்கு அத்தர் ரசுல் பெண்கள் அரபிக் கல்லூரி.
- வழுவூர் கிராம மக்களுக்கு ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் கல்லூரி.
ஜூலை 05, 2025
- வானாதிராஜபுரம் கிராம மக்களுக்கு ஏழுமலையான் ஐ.டி.ஐ. கல்லூரி.
- வில்லியநல்லூர் கிராம மக்களுக்கு வீட்டா வெர்சிட்டி பள்ளி.
ஜூலை 06, 2025
- ஆலங்குடி கிராம மக்களுக்கு ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் கல்லூரி.
- முருகமங்கலம் கிராம மக்களுக்கு தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
இந்திய ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள தகுதியுள்ள அனைத்து இளைஞர்களும் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இராணுவ பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, தங்கள் கேள்விகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும், இந்திய ராணுவத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய உண்மையான தகவல்களைப் பெறவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என கூறப்படுகிறது.





















