Upcoming Hybrid Cars: டீசல், பெட்ரோல் கதை ஓவர்..! ஹைப்ரிட் ஃபீவர் பத்திக்கிச்சு, முறுக்கிட்டு வரும் கார் மாடல்கள்
Upcoming Hybrid Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, ஹைப்ரிட் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Hybrid Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 8 ஹைப்ரிட் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹைப்ரிட் கார் வரலாறு:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முதல் ஹைப்ரிட் கார் மாடலாக, கடந்த 2008ம் ஆண்டு ஹோண்டா சிவிக் ஹைப்ரிட் அறிமுகமானது. முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால் அதன் விலை அதிகமாக இருந்தது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹைப்ரிட் கார் சந்தைக்கு வர 14 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் ஹோண்டா தான் சிட்டி ஹைப்ரிட் காரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனால், முக்கிய உபகரணங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால், அதன் விலையும் அதிகமாகவே இருந்தது. இதனால் விற்பனையும் மந்தமாகவே இருந்தது.
வளர்ச்சி கண்ட ஹைப்ரிட் கார்கள்:
அதேநேரம், 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே டொயோட்டாவின் அர்பன் க்ரூசர் ஹைரைடர் ஹைப்ரிட் மற்றும் கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் கார் மாடல்கள் விற்பனைக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மாடலும் சந்தைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இது ஹைப்ரிட் கார்களுக்கு எதிர்காலம் இருப்பதை உற்பத்தியாளர்களுக்கு உணர்த்தியது. அதேநேரம், புதிய உமிழ்வு விதிகள் மற்றும் கட்டுப்பாடு காரணமாக, டீசல் இன்ஜின்களுக்கு மாற்றை கண்டறிய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் முற்றிலும் மின்சார பவர்ட்ரெயின்கள் என்பது ஒரே தீர்வாக இருக்காது என்ற ஆலோசனை எழுந்தபோது தான், ஹைப்ரிட் சிஸ்டமின் ஆதிக்கம் மேலெழ தொடங்கியது.
அடுத்தடுத்து வரும் ஹைப்ரிட் கார்கள்:
1. கியா செல்டோஸ் ஹைப்ரிட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார் மாடலை விற்பனை செய்யும் அடுத்த பிராண்டாக கியா உருவெடுக்க உள்ளது. அடுத்த தலைமுறை செல்டோஸ் மூலம், உள்நாட்டு சந்தையில் ஹைப்ரிட் பயணத்தை தொடங்க இந்நிறுவனம் முடிவெடித்துள்ளது. நடப்பாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹைப்ரிட் செல்டோஸ் கார் மாடல், அடுத்த ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
2. ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட்
வரும் 2027ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தைக்கான தனது முதல் ஹைப்ரிட் கார் மாடலாக டஸ்டர் ஹைப்ரிட் எடிஷனை அறிமுகப்படுத்த உள்ளது. அதே ஆண்டின் பிற்பகுதியில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள, 7 சீட்டர் எஸ்யுவியிலும் ஹைப்ரிட் வேரியண்ட் இடம்பெறும் என தெரிகிறது. ரெனால்ட்டின் சகோதரி நிறுவனமான நிசானும் அதே மாதிரியான ஹைப்ரிட் எஸ்யுவிக்களை 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.
3. ஹுண்டாய் ஹைப்ரிட் கார்கள்:
ஹுண்டாய் நிறுவனம் தனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய 3 வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவியை 2027ம் ஆண்டு சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது அல்கசாரை காட்டிலும் பெரியதாக இருக்கும் என்றும், சந்தையில் மஹிந்திராவின் XUV 700 உடன் நேரடியாக மோதும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் கார் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. அதைதொடர்ந்து, 2027ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாக உள்ள, அடுத்த தலைமுறை கிரேட்டாவிலும் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஃபோல்க்ஸ்வேகன் ஹைப்ரிட் கார்கள்:
ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனமும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைப்ரிட் காரை, ஸ்கோடா மற்றும் ஃபோல்க்ஸ்வேகன் பிராண்டின் கீழ் விற்பனைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் வரும் 2028ம் ஆண்டில் அடுத்த தலைமுறை ஸ்கோடா குஷாக் கார் மாடல் ஹைப்ரிட் பவர்ட்ரெயினில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். அதனைதொடர்ந்து ஃபோல்க்ஸ்வேகனின் டைகுன், ஸ்லாவியா மற்றும் விர்டஸ் கார் மாடல்களும் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை பெற உள்ளன. இரண்டு நிறுவனங்களும் தலா ஒரு புதிய 7 சீட்டர் எஸ்யுவியையையும் அடுத்ததாக ஹைப்ரிட் பவர்ட்ரெயினில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
5. மஹிந்திரா ஹைப்ரிட் கார்கள்:
மஹிந்திரா நிறுவனம் முன்னதாக தனது எதிர்கால திட்டத்தில் ஹைப்ரிட் கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அடுத்தடுத்து ஹைப்ரிட் எடிஷன்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் கொண்ட மின்சார கார்களை அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இவை அடிப்படையில் மிகப் பெரிய, வெளிப்புறமாக சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி பேக் கொண்ட ஹைப்ரிட் கார்களாக இருக்கும். இது வழக்கமான சீரிஸ் ஹைப்ரிட் பவர் ட்ரெய்னுடன் 3XO மற்றும் BE 6 & XEV 9e ஆகியவை ரீசார்ஜ் செய்யக்கூடிய அம்சங்களை பெறும்.
6. டாடா ஹைப்ரிட் கார்கள்:
டாடா நிறுவனமும் ஹைப்ரிட் கார்களை வழங்குவதை ஆலோசனையாக கொண்டிருக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தையை முன்னெடுத்துச் செல்லும் அம்சமாக மாறுவதால், ஹைப்ரிட் கார்களின் மீது டாடாவும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மின்சார வாகனங்கள் மீதே அதிக கவனம் செலுத்தினாலும், தேவை அதிகரிப்பதால் ஹைப்ரிட் பயணத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அந்த நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் கார் மாடல் தொடர்பாக எந்தவித தகவலும் தற்போது வரை இல்லை.





















