மயிலாடுதுறையில் மறுக்கப்பட்ட கோயில் மண்டகப்படி உரிமை - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அளிக்கப்படும் கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
கோயில் வழிபாடு பிரச்சினை
பொதுவாக தாழ்த்தப்பட்ட வகுப்பின மக்களை கோயில் உள்ளே சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதும், மற்ற உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் கோயில் திருவிழாக்களில் பங்கேற்பது, மற்றும் மண்டகப்படி முறையில் வழிபாட்டில் அவர்களுக்கும் உரிமை வழங்காமல் இருப்பது என்பது, பல ஆண்டுகளாக இருந்துவரும் ஒன்று. இதனை பலர் பொறுத்துக்கொண்டாலும், சிலர் இதனை சகித்துக் கொண்டு செல்வதில்லை. அனைவருக்கும் சமமான வழிப்பாட்டு உரிமை வேண்டும் என போராடவும் செய்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடைபெறுவதும், இதனால் இருதரப்பினர் இடையே மோதல்களும், கலவரங்களும் நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
ADMK-EPS: எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி - அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் திடீர் ராஜினாமா
சித்திரை வருடப்பிறப்பு
இந்நிலையில் இதுபோன்ற நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மங்குடி பகுதியில் பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை ஒன்றாம் தேதி வருடப்பிறப்பு அன்று சுவாமிக்கு ஊர் மக்கள் ஒன்றிணைந்து பொது மண்டகப்படியாக அன்றைய செலவுகளை பகிர்ந்து கொள்வார்கள். அன்றைய தினம் அபிஷேக ஆராதனை செய்யப்படும் வைபவத்தை அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வருடப் பிறப்பு அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மண்டகப்படி செய்யக்கூடாது என்று மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு
மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தாழ்த்தப்பட்ட பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் செல்லக்கூடாது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தை நடைபெறாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நமச்சிவாயபுரம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களுக்கு உண்டான உரிமை மறுக்கப்பட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.