வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Fishing Prohibition Allowance : மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நெருங்கும் தேர்தல்- ஜாக்பாட் அறிவிப்புகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்தடுத்து புதிய புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்கில் 5ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. கோடை காலத்திற்காக 2ஆயிரம் ரூபாயும், தேர்தல் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க முடியாத காரணத்தால் 3ஆயிரம் என டெபாசிட் செய்யப்பட்டது.
ஓய்வூதிய தொகை - ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
ஆனால் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள், கைம்பெண்களுக்கு உதவித்தொகை போன்றோருக்கு நிதி உதவி கிடைக்காத நிலையானது இருந்து வந்தது. இதனையடுத்து தற்போது அவர்களுக்கும் உதவித்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
மீனவர்களுக்கும் 8000 தடைகால உதவித்தொகை
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்! வெல்வோம் ஒன்றாக! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.























