IPL 2024 Will Jacks: "கண்டா வரச் சொல்லுங்க" - ஆர்.சி.பி.யை காப்பாற்ற களமிறக்கப்படுவாரா வில் ஜேக்ஸ் - யார் இவர்?
ஆர்.சி.பி. அணி தொடர்ந்து தோல்வி முகத்தில் ஆடி வரும் சூழலில், அந்த அணிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வீரராக வில் ஜேக்ஸ் இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஐ.பி.எல். தொடர் 17வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் அவர்கள் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. ஆனாலும், விராட் கோலி எனும் ஜாம்பவான் 17 ஆண்டுகளாக ஆர்.சி.பி.க்கு கோப்பையை வென்று தர போராடிக் கொண்டிருக்கிறார்.
கண்டா வரச் சொல்லுங்க:
இந்தாண்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள ஆர்.சி.பி. அணி தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு மோசமான பவுலிங்குடன் மோசமான அணி தேர்வும் காரணம் என்று அணி நிர்வாகத்தை ஆர்.சி.பி. ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். விராட் கோலி தவிர வேறு எந்த முன்னணி வீரர்களும் சிறப்பாக ஆடாததும், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத்திற்கு முறையான வாய்ப்பு வழங்கப்படாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வில் ஜேக்சிற்கு கட்டாயம் வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். யார் இந்த வில் ஜேக்ஸ்? எதற்கு அவருக்காக இத்தனை குரல்கள்?
யார் இந்த வில் ஜேக்ஸ்?
வில்லியம் ஜார்ஜ் ஜேக்ஸ் என்பதே இவரது முழுப்பெயர். 26 வயதான இந்த இளைஞர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்து நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் 2 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனாலும், இவருக்காக ரசிகர்கள் குரல் கொடுப்பதற்கு காரணம் இவர் பல்வேறு நாட்டு லீக் போட்டிகளில் டி20 போட்டிகளில் சரவெடியாக பேட்டிங்கில் கலக்கியதே காரணம் ஆகும்.
52 முதல் தர போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 15 அரைசதங்களை விளாசியுள்ளார். அதில் 2 ஆயிரத்து 363 ரன்களை குவித்துள்ளார். 29 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 1 சதம், 4 அரைசதங்களுடன் 782 ரன்களை எடுத்துள்ளார். மிக, மிக முக்கியமாக 157 டி20 போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 30 அரைசதங்களை விளாசியுள்ளார். மொத்தம் 149 இன்னிங்சில் பேட்டிங் செய்து அதில் 10 முறை நாட் அவுட்டாக திகழ்ந்து 4 ஆயிரத்து 130 ரன்களை விளாசியுள்ளார். இமாலய சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்ட வில் ஜேக்ஸ் இதுவரை 220 சிக்ஸர்களையும், 399 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். இவரது சிக்ஸர் அடிக்கும் திறனுக்கு இணையத்தில் உலாவும் இவரது சிக்ஸர் அடித்த வீடியோக்களே சான்றாகும்.
அசத்தும் ஆல்ரவுண்டர்:
சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த சுழற்பந்துவீச்சாளராகவும் வில் ஜேக்ஸ் திகழ்கிறார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 52 முதல்தர போட்டிகளில் ஆடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ 29 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 157 டி20 போட்டிகளில் ஆடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். ஆர்.சி.பி. அணி தற்போதுள்ள சூழலில் அவர்கள் வைத்துள்ள மோசமான பவுலிங்கிற்கு அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியமான ஒன்றாக அமையும். அப்படிப்பட்ட அசசாத்தியமான பேட்டிங் திறன் கொண்டவர் வில் ஜேக்ஸ்.
வில் ஜேக்ஸ் இங்கிலாந்து அணிக்காக மட்டுமின்றி சர்ரே, சட்டோக்ராம் சேலஞ்சர்ஸ், கோமிலா விக்டோரியன்ஸ், டெல்லி புல்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், இஸ்லாமபாத் யுனெடைட், ஓவல் இன்வின்சிபிள், ப்ரெட்டோரியா கேபிடல்ஸ், கட்டா கிளாடியேட்டர்ஸ், சர்ரே செகண்ட் லெவன் என பல அணிகளுக்காக பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
என்ன செய்யப்போகிறது ஆர்.சி.பி.?
இதனால், அபாரமான பேட்டிங் திறன் கொண்ட வில் ஜேக்சை அணிக்குள் கொண்டு வருவது ஆர்.சி.பி.க்கு அவசியமாக உள்ளது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சொதப்பி வரும் சூழலில், அவருக்கு பதிலாக வில் ஜேக்சை அணிக்குள் கொண்டு வருவது நல்ல முடிவாக இருக்கும். அதேபோல, பந்துவீச்சில் பெஞ்சிலே உட்கார வைக்கப்படும் விஜயகுமார் வைஷாக், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பிரபுதேசாய், லோம்ரார் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிப்பது குறித்து அணி நிர்வாகம் சிந்தித்து சரியான முடிவு எடுக்க வேண்டும்.