எரிவாயு திட்டங்களால் டெல்டா விவசாயம் பாதிப்பு: ஆய்வு அறிக்கை வெளியிட மறுக்கும் அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!
எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளில், ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று மயிலாடுதுறையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் தொடரும் திட்டங்கள்
காவிரி டெல்டா பகுதிகள் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், அப்பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் கருத்தில் கொண்டு, 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த வட்டாரத்தைப் 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' அறிவித்தது. இந்த அறிவிப்பு, புதிய ஹைட்ரோகார்பன் மற்றும் இதர நாசகார திட்டங்கள் டெல்டா பகுதியில் வருவதைத் தடுத்தது.
ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஏற்கனவேச் செயல்பட்டு வந்த மீத்தேன், ஷேல் கேஸ் மற்றும் இதர எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, மண் வளம் குறைவது, விவசாய உற்பத்தி பாதிப்படைவது போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரப் பாதிப்புகள் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன என விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முடங்கியுள்ள ஆய்வு அறிக்கை
மீத்தேன் உள்ளிட்ட எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக, தமிழக அரசு சார்பில் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பாதிக்கப்பட்டப் பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் அறிக்கை மூலம் பாதிப்புகளின் தீவிரத்தை அரசுக்குத் தெரியப்படுத்தும் என்று விவசாயிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனாலும், ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுப் பல ஆண்டுகளைக் கடந்தும், அந்த ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு இன்றுவரை வெளியிடவில்லை. அறிக்கை வெளியிடப்படாததற்குக் காரணம் என்ன என்பது குறித்த வெளிப்படையான தகவல்கள் ஏதும் இல்லை. இதனால், அரசாங்கம் இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் விவசாயிகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் இந்த நீண்டகால தாமதத்தையும், அலட்சியத்தையும் கண்டித்தும், பழைய எண்ணெய் எரிவாயு திட்டங்களை உடனடியாக நிறுத்திவிட்டு வேளாண் மண்டலத்தின் நோக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், இன்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறைப் பேருந்து நிலையம் அருகே மக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்புடன் பல்வேறு விவசாய இயக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தலைமை தாங்கிய பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் பேசுகையில், "ஆய்வறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் போடுவது, காவிரி டெல்டா விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம். மத்திய, மாநில அரசுகள் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிப்புகளை மறைக்காமல், ஆய்வு அறிக்கையை வெளியிட்டு, வேளாண் மண்டலத்தின் உயிர்நாடியைக் காப்பாற்ற அரசு உடனடியாக முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.























