TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Tamil Nadu Assembly Election: தமிழ்நாட்டை ஆட்சி செய்த 3 முதலமைச்சர்களை முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக்கி சட்டசபைக்கு அனுப்பியது 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. அதில் மிக மிக முக்கியமான தேர்தல் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்.
3 முதலமைச்சர்களுக்கு முதல் வெற்றி:
ஏனென்றால், தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த 3 முதலமைச்சர்களை சட்டசபைக்கு முதன்முறையாக அனுப்பியது இந்த தேர்தலே ஆகும். அவர்கள்தான் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்.
ஜெயலலிதா:
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு நடந்த முதல் தேர்தலான இந்த தேர்தலில் அதிமுக ஜெயலலிதா தலைமையிலும், ஜானகி அம்மாள் தலைமையிலும் தேர்தலைப் பிரிந்து சந்தித்தது. அதிமுக ஜெ அணி என்ற பெயரில் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாக களம் கண்டது. இந்த அணிக்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கினார்.
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்து மனோகரன் 28 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்றார். ஆனால், ஜெயலலிதா 57 ஆயிரத்து 603 வாக்குகள் பெற்று முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். இதே தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக ஜானகி அணியைச் சேர்ந்த சாந்தி என்ற நிர்மலா 6 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார்.
எடப்பாடி பழனிசாமி:
1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா அணிக்காக களமிறங்கியவர் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து 30 ஆயிரத்து 765 வாக்குகள் பெற்று முதன்முறையாக வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரான பழனிசாமி 29 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியைச் சேர்ந்த கணேசன் 15 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த பல்வேறு சவால்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பிடித்தார். பின்னர், தற்போது அதிமுக-வையும் கைப்பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மு.க.ஸ்டாலின்:
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதன்முதலில் போட்டியிட்ட தேர்தல் 1984. ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுியில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 30 ஆயிரத்து 184 வாக்குகள் பெற, திமுக-விற்காக களமிறங்கிய மு.க.ஸ்டாலின் 50 ஆயிரத்து 818 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் எந்த தேர்தலில் தோல்வியே காணவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது.
இவர்கள் 3 பேருக்கும் இந்த தேர்தலே முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் செல்வதற்கான தேர்தலாக அமைந்தது. இந்த வெற்றிக்கு பிறகு இவர்களது அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்திலே அமைந்தது.
மேலும், எம்ஜிஆர் அதிமுக-வை உருவாக்கி தான் உயிருடன் இருந்த வரை ஆட்சியை தன்வசமே வைத்திருந்த நிலையில், அவரிடம் இருந்து மீண்டும் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய தேர்தலும் 1989ம் ஆண்டு தேர்தல் ஆகும்.























