தேனி : பெரியகுளம் அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 35 கிலோ பாலித்தீன் பைகள்.. அதிர்ச்சியடைந்த மக்கள்
பரிசோதித்ததில் காளையின் வயிற்றில் 35 கிலோ நெகிழிப் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் கால்நடை மருத்துவமனையில் இயங்கி வரும் தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை வளாகத்திற்கு, தேனியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தனது ஜல்லிக்கட்டு மாடு சரிவர தீவனம் எடுக்காமலும் நான்கு மாதங்களாக தொடர்ந்து வயிறு உப்புசத்துடனும் இருப்பதாக கூறி சிகிச்சைக்கு காளையை அழைத்து வந்தார் மருத்துவர்கள் காளையை பரிசோதித்ததில் வயிற்றில் ஜீரணமாகாத நெகிழிப்பைகள் அடைத்து உள்ளதை கண்டறிந்து, காளைக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்த நெகிழியை அகற்ற முடிவு செய்தனர் .
கால்நடை சிகிச்சை வளாக பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் உமா தலைமையில் டாக்டர் அருண், டாக்டர் சொளபரண்யா மற்றும் டாக்டர் விஷ்ணுராகவ் ராணி கொண்ட மருத்துவக் குழு காளைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர், அறுவை சிகிச்சையில் 35 கிலோ அளவிலான நெகிழிப்பைகள் மற்றும் கட்டுக்கம்பி, சாவி, துணி தைக்கும் ஊசி, நைலான் கயறு போன்ற அயல் பொருட்களை காளையின் வயிற்றிலிருந்து அகற்றினர்.
மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் காளையின் பராமரிப்பு குறித்து ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் டாக்டர். பி. என். ரிச்சர்டு ஜெகதீசன் கூறுகையில் , "பொதுவாக வெளியே சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் ஆடுகளுக்குத் தீவனப்பற்றாக்குறை இருப்பதால் அவைகள் இது போன்ற நெகிழிப்பைகள், ஊசி, கம்பிகளை உட்கொள்ள நேரிடுகிறது.
தேனியில் கெடு முடிந்தும் பிடி கொடுக்காத திமுக சேர்மன் - வேதனையில் காங்கிரஸ் நிர்வாகிகள்
பொதுவாக வெளியே மேயும் மாடுகள் மற்றும் ஆடுகள் போதுமான தீவனம் கிடைக்கப்படாமல் இருக்கும் பொழுதும், உடலில் சத்துக் குறைபாடுள்ள பொழுதும், பகுத்தறியாமல் உண்ணும் பழக்கத்தால் நெகிழிப்பைகள் மற்றும் இதர அயல்பொருட்களை மற்ற கழிவுத் தீவனங்களோடு சேர்த்து உண்டு விடுகின்றன. தக்க சமயத்தில் கால்நடைகள் கவனிக்கப்படாவிட்டால் நெகிழிப்பைகளின் நச்சுத்தன்மை, செரிமானக்கோளாறு, வயிற்று உப்புசம் போன்ற காரணங்களால் கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும். அதனால் கால்நடைகளை குப்பைத்தொட்டி மற்றும் அங்காடிகள் அருகே மேயவிடக்கூடாது.
கால்நடைகளுக்கு போதுமான அளவு கலப்புத்தீவனம், பசுந்தீவனம் மற்றும் தாது உப்புக் கலவையை கொடுக்க வேண்டும். சமுதாய அக்கறையோடு பொதுமக்கள் நெகிழிப்பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நீர், நிலத்தின் தன்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வாயில்லா ஜீவன்களாகிய கால்நடைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவும் என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்