Aadi Perukku 2025: இன்று ஆடிப்பெருக்கு.. களைகட்டிய தமிழ்நாடு.. காவிரி கரையில் திரண்ட பக்தர்கள்..!
Aadi Peruku 2025: தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. காவிரி கரையில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் என்றாலே ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என சிறப்பு வாய்ந்த நாட்கள் இந்த மாதத்தில் வந்தாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு உ்ளளது.
இன்று ஆடிப்பெருக்கு:
ஆடி மாதத்தில் வரும் 18ம் தேதியே ஆடிப்பெருக்காகவும், ஆடி 18 நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி கரையில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குவிந்து காவிரி நதியை வழிபட்டு, காவிரி அன்னையை பூக்கள் தூவி வணங்கி படையலிட்டு வணங்குவது வழக்கம்.
தாலி பிரித்துக் கோர்த்த தம்பதிகள்:
இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் காவிரி நதிக்கரையில் குடும்பத்துடன் பக்தர்கள் குவிந்து சாமிதரிசனம் செய்தனர். வாழை இலையிட்டு சர்க்கரை பொங்கல், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கின் சிறப்பம்சமே புதுமண தம்பதிகள் தாலி பிரித்துக் கோர்ப்பதே ஆகும்.

புதியதாக திருமணமான தம்பதிகள் காவிரி படித்துறையில் குவிந்து தாலி மாற்றிக் கொண்டனர். கணவன்மார்கள் தங்களது மனைவிகளுக்கு புது தாலிக்கயிற்றை கட்டினர். பின்னர், காவிரி தாயை வணங்கி பெரியவர்களிடமும் ஆசி பெற்றனர்.
பூக்கள், பழங்கள் விற்பனை ஜோர்:
இன்று ஆடிப்பெருக்கு என்பதால் வீடுகளிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடப்பது வழக்கம். இதனால் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் காய்கறிகள், பழங்கள் வரத்து நேற்று முதலே வழக்கத்தை விட அதிகரித்து இருந்தது. காலை முதலே காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

ஆடிப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்து வருகிறது. காவிரி நதி மட்டுமின்றி பிற புண்ணிய நதிகளின் கரைகளிலும் மக்கள் வழிபாடு நடத்தினர். பல பகுதிகளில் நதிகளுக்கு பூக்களை தூவி மக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகம் கூடும் கோயில்களில் போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது..





















