மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி திட்டம்! அரசு பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சி- விவரம்!
பள்ளி மாணவிகள் எந்தவொரு சூழலையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல், திறனை வளர்க்கும் வகையில், Karate, Judo, Taekwondo, Silambam போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த கல்வியின் கீழ் 6045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .4000 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ 12,000 ஆக மொத்தம் ரூ.725.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலத் திட்ட இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:
ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் கீழ் 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ.4000/- பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ.12000 ஆக மொத்தம் ரூ.725.4 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5804 உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ.4000/- பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ.12,000 ஆக மொத்தம் ரூ.823.56 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதற்காக இந்தப் பயிற்சி?
பள்ளி மாணவிகள் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில், Karate, Judo, Taekwondo, Silambam போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகள். மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன். அவர்களது பாதுகாப்புக்கும் உறுதுணையாக அமைந்துவிடுகின்றன.
பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சிகளை நடத்திடத் தேவையான நெறிமுறைகள்:
அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான தற்காப்புக்கலை மற்றும் பயிற்சியாளரை சார்ந்த பள்ளி மேலாண்மை குழுக்களே தேர்வு செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலோ. வட்டார அளவிலோ தேர்வு செய்தல் கூடாது. EMIS தளத்தில் தற்காப்பு கலைப் பயிற்சி சார்ந்து பயிற்சியாளர் விவரம். பயிற்சியின் விவரங்களை உரிய நேரத்தில் Administrator cum Instructor தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.
பள்ளி அளவில் என்ன செய்ய வேண்டும்?
1. கராத்தே, ஜீடோ, டேக்வேண்டோ, சிலம்பம் பயிற்சிகளில் ஏதேனும் ஒரு பயிற்சியை தேர்வு செய்து வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்களில் ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று மாதங்களுக்கு கற்றுத்தருதல் வேண்டும் மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
2. அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள பாடத்திட்டத்தை பின்பற்றி பள்ளி வளாகத்தில் தற்காப்பு கலைப்பயிற்சி கற்றுத்தரப்பட வேண்டும். ஒரு பள்ளியில் அதிகபட்சம் 100 மாணவியர்களுக்கு மிகாமலும் குறைந்தபட்சம் 10 மாணவியர்களுக்கும் குறையாமலும் தற்காப்பு கலைப்பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும்.
3. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் 200 க்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அப்பள்ளிகள் இரு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவில் 100 மாணவியர்கள் வீதம் தற்காப்பு கலைப்பயிற்சி கற்றுத்தரப்பட வேண்டும்.
4. எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு பள்ளியில் பயிலும் மாணவியர்களைப் பயிற்சிக்காக வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல் கூடாது.
5. மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புகலை பயிற்சி அளிப்பதில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.
6. அன்றாடம் பயன்படுத்தும் ஆடை மற்றும் பிற பொருட்களைக் (KEY CHAIN. DUPPATTA, STOLE, MUFFLERS, BAGS, PEN, PENCIL, NOTE BOOKS, ETC..) கொண்டு, ஆபத்து காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் அளிக்க வேண்டும்.
7. பெண் பயிற்றுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். பெண் பயிற்றுநர் இல்லாத நிலையில் ஆண் பயிற்றுநரை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறான நிலையில் பெண் ஆசிரியைகள் மேற்பார்வையில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
8. பயிற்சியில் பங்குபெறும் மாணவிகளுக்கு கட்டாயம் வருகை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
9. அந்தந்த தற்காப்புக் கலைக்குரிய முன்னேற்பாடுகளுடன் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பங்கு பெறும் மாணவிகளின் பாதுகாப்பிற்கு உரிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
10. பயிற்சி சீரிய முறையில் நடக்க அந்தந்தப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்றும் மாநிலத் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.






















