Finance: மிடில் கிளாஸா..! வருமானம் பத்தலையா?? செலவை குறைச்சு, சேமிக்க வழி என்ன? குடும்பஸ்தனின் அட்வைஸ்
Tips For Savings: வருவாய் பற்றாக்குறையால் அவதிப்படும் மக்கள் எப்படி செலவை குறைத்து சேமிப்பை பெருக்குவது என்பதற்கான சில ஆலோசனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

Tips For Savings: வருவாய் பற்றாக்குறையால் அவதிப்படும் மக்கள் செலவை குறைப்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அல்லல்படும் நடுத்தர மக்கள்:
ஏழையாகவும், பணக்காரனாகவும் கூட இருந்துவிடலாம்.. ஆனால், ரெண்டும் கெட்டானாக நடுத்தர வாழ்க்கையில் சிக்கியவர்களின் நிலைமை தான் ஒவ்வொரு நாளும் திண்டாட்டமாக மாறுகிறது. மாத சம்பளம் ஒரு நாள் தாமதமானாலும் ஒட்டுமொத்த உலகமும் நின்றுவிடுமே என அச்சப்படும் இதே மிடில் கிளாஸ் மக்கள் தான், சம்பளம் விழுந்த அடுத்த சில தினங்களிலேயே மொத்தமாக செலவழித்து அடுத்து என்ன செய்வதும் என்றும் வழியறியாமல் தவிக்கின்றனர். இதற்கு முறையான திட்டமிடல் இல்லாததும், எப்படி? எங்கே? அநாவசிய செலவுகளை செய்கிறோம் என்பதை அலசி ஆராய்ந்து பார்க்காததும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே, எப்படி செலவை குறைத்து சேமிப்பை பெருக்குவது என்பதற்கான சில அடிப்படை ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
செலவும்..சேமிப்பும்..
ஒருவரின் செலவு மற்றும் சேமிப்பு என்பது, அவரது வருவாய், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சூழல் மற்றும் முன்கூட்டியே எடுத்துக்கொண்ட சில கம்மிட்மெண்ட்களை (EMI, கடன்) ஆகியவற்றை சார்ந்ததாகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருந்தால், மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கும். அதுவே நன்கு வளர்ந்த குழந்தைகள் இருந்தால், அவர்களது கல்விக்காக கணிசமான நிதியை ஒதுக்க வேண்டி இருக்கும். இதுபோக ஒவ்வொரு மாதத்திலும் தவிர்க்க முடியாத சில அடிப்படை செலவுகளும் இருக்கின்றன. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் ஒருவரது மாத செலவு மற்றும் சேமிப்பு என்பதை திட்டமிட முடியும். இருப்பினும் அடிப்படை செலவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம், பட்ஜெட்டில் துண்டு விழுவதற்கான வாய்ப்பை குறைப்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சூப்பர் மார்கெட்டுகளுக்கு ”நோ”
ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்களை வாங்குவது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த கொள்முதலுக்கு சூப்பர் மார்கெட்டை நாடுவது என்பது சரியான தேர்வு கிடையாது என்பது அனுபவத்தில் உணர்ந்ததாகும். வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து ஏராளமான பொருட்களை காட்சிப்படுத்துவதன் மூலம், நீங்கள் பட்டியலிட்டு சென்ற பொருட்களை தாண்டி, உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை கூட வாங்க தூண்டப்படுகிறீர்கள். அவர்களது கடை வாடகை, மின்சார கட்டணம் மற்றும் தொழிலாளர் கூலி உள்ளிட்ட அனைத்தையும் பொருட்களின் விலையில் சேர்த்து, வாடிக்கையாளர்களின் தலையில் கட்டுகின்றனர். சில நேரங்களில் சில பொருட்கள் குறைந்த அளவிலேயே தேவைப்பட்டாலும், அந்த அளவில் பேக் செய்யப்படாததால் பெரிய பேக்கினை அநாவசியமாக வாங்க வேண்டி இருக்கும். இதுபோன்று ஏற்படும் கூடுதல் செலவுகளை தவிர்க்க நீங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் சில்லறை கடைகளை தேர்வு செய்யலாம். சற்றே மலிவு விலையில் பொருட்களை வாங்க முடியும். அதோடு, வேண்டிய அளவினை நீங்களே தேர்வு செய்து பேக் செய்து வாங்கலாம். தேவைக்கு அதிகமாக வாங்க வேண்டிய கட்டாட்யத்திற்கும் தள்ளப்படமாட்டீர்கள்.
”மொத்தமாக வாங்குவது நல்லது”
”சிறுதுளி பெருவெள்ளம்” என்பது போல சில்லறை செலவுகள் தான் நமது பட்ஜெட்டில் துண்டு விழ முக்கிய காரணங்களாகின்றன. வீட்டிற்கு தேவையான பொருட்களை நன்கு ஆராய்ந்து பட்டியலிட்டு, மொத்தமாக வாங்க பாருங்கள். காரணம், மளிகை பொருட்கள் போன்றவை மொத்தமாக வாங்கும்போதை காட்டிலும், சில்லறை விற்பனையின் போது கூடுதல் விலையுடன் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, தேவையை உணர்ந்து மொத்தமாக வாங்குவதே அநாவசியமான சில்லறை செலவுகளை குறைக்க உதவும்.
”கூகுள் பே, போன் பே வேண்டாமே”
பணத்தை பார்த்து தான் செலவு செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால், கூகுள் பே போன்ற செயலிகளின் அறிமுகத்திகு பிறகு, கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையே நாம் நினைவில் வைத்துக் கொள்வது இல்லை. சென்ற இடமெல்லாம் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்து பணத்தை செலவிட்டு வருகிறோம். இதனால் வரைமுறையின்றி உங்களது வருமானம் கரைந்துபோகிறது. கையில் பணத்தை வைத்து இருந்தால் மட்டுமே, அதனை உணர்ந்து பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவுகளை திட்டமிட முடியும். சில குறிப்பிட்ட தேவைகளுக்கு வேண்டுமானால் கூகுள் பே போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால், டீ குடிக்க கூட கூகுள் பே தான் என்றால், சேமிப்பு என்பது உங்களுக்கு கனவாகவே மாறிவிடும்.
மிச்சமாகட்டும்..சேமிக்கலாம்..
சேமிப்பு போகவே செலவு என்று தான் இருக்க வேண்டும். ஆனால், சம்பளத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் செலவு இருப்பதால், நடுத்தர மக்களுக்கு அது சிரமமாக தெரியலாம். இதன் காரணமாகவே மாத கடைசி வரட்டும், அப்போது ஏதேனும் மிச்சம் இருந்தால் அதனை சேமிப்பாக மாற்றிக் கொள்ளலாம் என கருதுகின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். முதலில் சேமிப்பிற்கான பணத்தை ஒதுக்கிவைத்த பிறகே, செலவுக்கான கணக்குகளை தொடங்க வேண்டும். இல்லையேனில் இந்த மாதம் அதிக செலவு இருக்கிறது, அடுத்த மாதம் சேமிப்பை பார்த்துக் கொள்லலாம் என தட்டிக் கழித்துக்கொண்டே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
சோசியல் மீடியாக்களுக்கு ”நோ”
இன்றைய நவீன உலகத்தில் நமது வாழ்க்கை முறையை தீர்மானிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் வரும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை பார்த்து ஆடைகள், உணவுகள் உள்ளிட்டவற்றின் மீது பணத்தை செலவழிப்பது அதிகரித்துள்ளது. ஆனால், உண்மையில் அப்படி சமூக வலைதளங்களை பார்த்து நாம் வாங்கும் பல பொருட்கள் தேவையற்றதாகவே உள்ளது. காரணம் சமூக வலைதளங்களில் காட்டப்படுவதும், நாம் வாழும் வாழ்க்கை என்பதும் முற்றிலும் வேறு. உணர்ந்து செயல்பட்டால் உங்களது பணத்தை முறையாக சேமிக்க முடியும்.
உழைத்து சம்பாதிக்கும் பணத்தை முறையாக பயன்படுத்துவதோடு, தேவைகளை உணர்ந்து சேமிப்பது என்பதும் அவசியம். இல்லையெனில் அவசர காலங்களில் மற்றவர்களை நாட வேண்டி இருக்கும்.





















