Crime: கஞ்சா கடத்திய வழக்கில் அஜித், விஜய் கைது! மதுரை மத்திய சிறையில் அடைப்பு - சிக்கியது எப்படி?
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சில்லறை விற்பனைக்காக கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நபர்களை காவல்துறை மடக்கியது.
காவல்துறை நடவடிக்கைகள்:
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் கஞ்சா கடத்தப்பட்டுவருவதாக மதுரை மாநகர மத்திய புலனாய்வு பிரிவு (CIU) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பெயரில் கஞ்சா கடத்தல் குறித்து மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை வைகையாற்று கரையோரம் புட்டுத்தோப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி அதில் சோதனையிட்டபோது காருக்குள் 20 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கஞ்சா கடத்தல்:
இதனையடுத்து காரில் வந்த மதுரை சூர்யாநகரை சேர்ந்த அஜித்குமார் (28) அவரின் ஆக்டிங் டிரைவர்களாக அழைத்துவந்த மதுரை உத்தங்குடியை சேர்ந்த விஜய், புதூர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் ஆகிய மூவரையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா கடத்தலில் சிக்கிய அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையின் போது மதுரையின் பிரபல ரவுடியான லோடு முருகனின் நண்பரான சதாம் உசேன் என்பவர் மூலமாக ஆந்திர மாநிலம் விஜயவாடா, பத்ராசலம் என்ற ஊரில் உள்ள கணேசன் என்பவரிடம் மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு சென்று 11 லட்சம் கொடுத்து 20 கிலோ கஞ்சாவை கடத்திவந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை சென்னையிலுள்ள சில்லரை வியாபாரிகளுக்கும், மதுரையில் உள்ள புவனேந்திரன் என்பவருக்கும் சில்லறை விற்பனைக்காகவும் கொடுத்துவிட்டு அஜித்தும் சில்லறைக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
மாநகர் காவல் ஆணையர் பாராட்டு:
இதனையடுத்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் , விஜய், விவேகானந்தன் உள்ளிட்டோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 20 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடமும் கூடுதல் விசாரணை நடத்திய பின்னர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்திலில் ஈடுபட்ட மூவருடன் தொடர்புடைய சில்லறை வியாபாரிகளான புவனேந்திரன் மற்றும் 20 கிலோ கஞ்சாவை விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த கணேசன் அதற்கு உதவியாக இருந்த பிரபல ரவுடி லோடு முருகன் மற்றும் அவரின் நண்பன் சதாம் உசேன் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சில்லறை விற்பனைக்காக கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மதுரை மாநகர மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு மாநகர்காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.