துவங்கவுள்ள பருவமழை... தயார் நிலையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம்
இடுக்கி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அரபிக் கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் மூன்று நாள்களில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக கோடை காலமான மே மாதம் வெயில் வாட்டி வதைக்கும் ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அவ்வப்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெக்கை குறைந்தது. அதே போல் அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவழை மூன்று நாள்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பத்து நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஒரு சில நாட்களில் துவங்க உள்ளதால், மழையை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிலச்சரிவு, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டுமெனவும், அனைத்து தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும். பேரிடர் பாதிப்பு பகுதிகளில் கர்ப்பிணிகள், உடல், மன நிலை பாதித்தவர்கள், படுக்கை நோயாளிகள், குழந்தைகள் ஆகியோரின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது செயல்பட்ட நிவாரண முகாம்கள் செயல்படுத்தப்படும். அதில் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக மழை அதிகம் பெய்யும் நாட்களில் அணை திறப்பது பகல் வேளையில் துல்லியமாக இருக்க வேண்டும். அது தொடர்பாக பொதுமக்களுக்கு முறையாக முன் அறிவிப்பு வழங்க வேண்டும். சாலையின் இருபுறமும் 5 மீட்டர் சுற்றளவில் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும்போது வீடுகளுக்கு தனியாக செல்லும் மாணவ, மாணவிகளின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு 2200 போலீசார், 600 சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக போலீஸ், தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் பேரிடர் பாதிப்பு பகுதிகள் அடையாளம் கண்டு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும். 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண திட்டம் தயார் செய்யப்படும். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.





















