மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு
தொடர் பனிப்பொழிவு மற்றும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி ,நத்தம், தொப்பம்பட்டி உட்பட பல இடங்களில் பூக்கள் விளைகிறது. பூக்களுக்கு காலம் என்பது இங்கு இல்லை. அனைத்து மாதங்களிலும் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பூக்களிலே பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை , மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நாளை முதல் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல் வீடுகளில் மக்கள் வழிபாடு செய்வர்
இந்நிலையிலும் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுவதால் பூக்களின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. அதன்படி, மல்லிகைப்பூ ஒரு கிலோ 2500 ரூபாய்க்கும், முல்லை பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 900 க்கும், காக்கரட்டான் 700 ரூபாய்க்கும், ஜாதி பூ 600 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 200ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டன் ரோஸ் 170 ரூபாய்க்கும், சம்பங்கி 180 ரூபாய்க்கும், செவ்வந்தி 160 ரூபாய்க்கும், செண்டுமல்லி 80 ரூபாய்க்கும், கோழி கொண்ட 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதோபோல் தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டத்திலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கம்பம் பூ மார்கெட்டில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக பூக்கள் வாங்கவும் கேரளாவிற்கு இந்த பூ மார்க்கெட்டிலிருந்தே அதிகளவில் ஏற்றுமதியாவதும் உள்ள நிலையில், தற்போது பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ 2 ஆயிரம் ருபாய் வரையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் மற்ற பூக்களின் விலை சென்ற வாரத்தில் விற்பனையானதை விட தற்போது பூக்களின் விலை உயர்ந்துள்ளது.