மதுரை அமெரிக்கன் கல்லூரியின் Green Club மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு அறக்கட்டளை - மதுரை, இணைந்து நடத்திய பறவை காணுதல் நிகழ்வு கரிசல்குளம் கண்மாய் மற்றும் அவனியாபுரம் கண்மாயில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வை மேற்குத்தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் மதுரை ஒருங்கிணைப்பாளர் அகில் ரிஷி ராஜசேகரன், மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் அவர்கள் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் அரிட்டாப்பட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்கத் தலைவர் அ.ரவிச்சந்திரன், மதுரையின் மூத்த பறவை ஆர்வலர் மரு. பத்ரிநாராயணன், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், குழந்தைகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பறவை இனங்களையும், அவற்றின் தனித்துவம் மற்றும் பழக்கங்களையும் கண்டறிந்தனர்.
![பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/09/1b3ad035cc3b602daf73248d31e4cf39_original.jpg)
தாழைக் கோழி, நீலத்தாழைக் கோழி, நாமக்கோழி, நீர்க்காகம், மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, புள்ளிமூக்கு வாத்து, சீழ்க்கைச் சிறகி, பாம்புத்தாரா, கதிர் குருவி, பனை உழவாரன், அன்றில், சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளையும், வலசை வந்த பறவைகளான நீலச் சிறகி, தகைவிலான், பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி ஆகியப் பறவைகளையும் கண்டுக்களித்தனர். சுமார் இரண்டாயிரம் பறவைகளின் வசிப்பிடமாக இருக்கும் கரிசல்குளம் கண்மாயினுள் குப்பைகள் கொட்டப்படுவதும், சாக்கடை நீர் கலப்பதும் மிகவும் வருத்தம் அழிக்கும் செயலாக இருக்கிறது. இந்த கண்மாயை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த ஆண்டு, மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை, நான்கு கண்மாய்களை மதுரையில் தேர்வு செய்து அவற்றிற்கு வரும் வலசைப் பறவைகளை ஆவணப்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தப் பணி அடுத்த ஆறுமாதக் காலத்திற்கு நீடிக்கும் என தெரிவித்தனர்.
![பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/09/a34218866f35729733d10afd11701eb4_original.jpg)
மேலும் இது குறித்து நம்மிடம் அரிட்டாபட்டி ரவி...,” நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பறவைகள் காணுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து பறவைகள் வலசை வந்துள்ளது. கண்களுக்கு இதமான பறவைகள் காணுதல் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளும் கலந்துகொண்டனர். இதே போல் அரிட்டாபட்டி கிராமத்தில் பறவைகள் காணுதல் நிகழ்ச்சி ஏற்படுத்த உள்ளோம். அரிட்டாபட்டியில் உள்ள பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை காப்பாற்ற பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம், என்பது குறிப்பிடதக்கது. அரிட்டாபட்டியில் வேறு எங்கம் அதிகம் காண முடியாத அரிய வகை பறவைகள் உள்ளது. அவற்றை ஆவணப்படுத்தும் பணி தொடரும் ”என்றார்.