Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
Iran vs Israel War Impact: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தாக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெட்ரேல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கிவரும் நிலையில், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் ஆணிவேராக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெட்ரேல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்.?
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து தற்போது ஈரானை தாக்கி வருகிறது. ஈரானும் பதிலடி கொக்க ஆரம்பித்த நிலையில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கமேனி கொலைக்கு கடுமையாக பழிவாங்குவோம் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், அப்படி செய்தால் இதுவரை காணாத தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் எச்சரித்துள்ளார்.
இத்தகைய சூழலில், தற்போது கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், வளைகுடாவில் பயணத்தில் உள்ள வர்த்தக கப்பல்களிலிருந்து முக்கிய தகவல்கள் இங்கிலாந்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டன் கடற்படை வர்த்தக அலுவலகத்திற்கு இந்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு உயிர் நாடி போன்றது. கடந்த மாதமே ஈரான் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.
சமீபத்தில் போர் பயிற்சியின்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தி சில மணி நேரம் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுவதும் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி செய்யப்படும் பட்சத்தில், அது சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கும். ஏனென்றால், இந்த கடல் வழித்தடம் தான், வளைகுடாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படும்.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது என்ன.?
ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு குறுகிய, அதே சமயம் முக்கியமான கடல் பாதையாகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடனும், அரேபிய கடலுடனும் இணைக்கிறது . இதன் மொத்த நீளம் தோராயமாக 161 கிலோமீட்டர்கள். அதே நேரத்தில், அதன் பரபளவின் மிகக் குறுகிய இடத்தில், அதன் அகலம் தோராயமாக 50 கிலோமீட்டர்கள். அதன் ஆழம் 60 மீட்டருக்கும் குறைவானது தான். அதன் கப்பல் பாதைகள் இரு திசைகளிலும் மிகவும் குறைவாக இருப்பதால், இந்தப் பகுதி மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
எதனால் முக்கியத்துவம் பெறுகிறது ஹார்முஸ்.?
உலகின் கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 5-ல் ஒரு பங்கு, அதாவது, கிட்டத்தட்ட 20 மில்லியன் பீப்பாய்கள், ஒவ்வொரு நாளும் இந்த ஜலசந்தி வழியாகத் தான் செல்கிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக் , குவைத் , கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், இந்த பாதை வழியாகவே தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி, இதன் வழியாக செல்லும் எண்ணெயின் பெரும்பகுதி ஆசிய சந்தைகளை அடைகிறது. இதனால்தான், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் சிறிதளவு பதற்றம் கூட, உலகளாவிய எண்ணெய் விலைகளை பாதிக்கலாம். மேலும் , பல முக்கியமான துறைமுகங்கள் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமைந்துள்ளன.
ஈரானின் அப்பாஸ் துறைமுகம் ஒரு முக்கிய கடற்படை மற்றும் வணிக துறைமுகமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைரா எண்ணெய் சேமிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. ஓமானின் சோஹர் துறைமுகம் மற்றும் கத்தாரின் ராஸ் லஃபான் துறைமுகம் ஆகியவை, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான முக்கிய துறைமுகங்களாகக் கருதப்படுகின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த ஹார்மூஸ் ஜலசந்தியை சார்ந்துள்ளது.
இதனால் தான், இந்த ஜலசந்தி மூடப்பட்டால், கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. அந்த விலை உயர்வால் பாதிக்கப்படும் நாடுகளில், இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.























