Bullet Train: அடங்கப்பா! பிரமிக்க வைக்கும் நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம்...வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!
Bullet Train: புல்லட் ரயில் தொடர்பாக புதிய தகவல் ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.
புல்லட் ரயில்:
எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1.08 லட்சம் கோடி ஆகும். இதில் ரூ.10,000 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. அதே நேரத்தில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா தலா ரூ.5,000 கோடியை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்திற்கான நிதியை 0.1 சதவீதம் வட்டி விகிதத்தில் இந்தியாவிற்கு ஜப்பான கடனாக வழங்குகின்றது.
ரயில்வே அமைச்சர் தந்த புது அப்டேட்:
ரயில் மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் சபர்மதி, ஆனந்த்/நாடியத், வதோதரா, பரூச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானோ என 12 ரயில் நிலையங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 508 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புல்லட் ரயிலின் முதல் ரயில் பாதைக்கான கட்டுமான பணிகள் வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Terminal for India's first bullet train!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 7, 2023
📍Sabarmati multimodal transport hub, Ahmedabad pic.twitter.com/HGeoBETz9x
இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய புல்லட் ரயில் நிலையத்தின் வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க