(Source: ECI/ABP News/ABP Majha)
Manohar Joshi: திடீர் மாரடைப்பு - காலமானார் முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி
Manohar Joshi: மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மற்றும் மக்களவை சபாநாயகர் மனோகர் ஜோஷி காலமானார்.
Manohar Joshi: மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, மாரடைப்பு காரணமாக பலியானதாக அறிவிக்கப்பட்டது.
மனோகர் ஜோஷி காலமானார்:
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஷி மும்பையில் உள்ள பிடி இந்துஜா மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஜோஷியின் இறுதிச்சடங்கு மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மயானத்தில் இன்று மாலை நடைபெறும். அவருக்கு வயது 86.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நந்த்வியில் டிசம்பர் 2, 1937 ஜோஷி பிறந்தார். மும்பையில் தனது படிப்பை முடித்த அவர், அனகா என்பவரை மணந்தார். கடந்த 2020ம் ஆண்டு அனகா உயிரிழந்த நிலையில், ஜோஷிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜோஷியின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Former CM of Maharashtra and Former Lok Sabha Speaker Manohar Joshi breathed his last today at Hinduja Hospital Mumbai at around 3:00 am. He was admitted to Hinduja Hospital on February 21 after he suffered a cardiac arrest: Family sources pic.twitter.com/vEEKPTVTtN
— ANI (@ANI) February 23, 2024
அரசியல் வாழ்க்கை:
மனோகர் ஜோஷி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், 1967 இல் அரசியலில் நுழைந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனாவில் பயணித்தார். 1968-70 இல் மும்பையில் முனிசிபல் கவுன்சிலராகவும், 1970 இல் நிலைக்குழு (நகராட்சி கார்ப்பரேஷன்) தலைவராகவும் இருந்தார். 1976 முதல் 1977 வரை ஒரு வருடம் மும்பை மேயராகவும் பணியாற்றினார். பின்னர் அவர் 1972 இல் மகாராஷ்டிர சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்ட மேலவையில் பணியாற்றிய பிறகு, 1990ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மனோகர் ஜோஷி 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிர முதலமைச்சராக பணியாற்றினார் மற்றும் பிரிக்கப்படாத சிவசேனாவிலிருந்து மாநிலத்தில் முதலமைச்சர் பதவி வகித்த முதல் நபர் அவராவார். சரத் பவார் தலைமையிலான அரசை வீழ்த்தி, மாநிலத்தில் முதல் முறையாக சிவசேனாவை ஆட்சிக்கு கொண்டு வந்தார். வாஜ்பாய் தலைமையிலான அரசில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஷி, 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார்.
1990-91 காலகட்டத்தில் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். 1999 பொதுத் தேர்தலில் மும்பை வட-மத்திய மக்களவைத் தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.