Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result 2024: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதனால். பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Maharashtra Assembly Election Result 2024: நாட்டின் மிக மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று மகாராஷ்ட்ரா. உத்தரபிரதேசத்திற்கு பிறகு நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்ட்ரா. அங்குள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. மாஸ்:
இதையடுத்து, இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் மகாயுதி கூட்டணி போட்டியிட்டது. இவர்களை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் அகாதி கூட்டணி போட்டியிட்டது.
மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று சிவசேனாவை முழுமையாக கைப்பற்ற ஏக்நாத் ஷிண்டே வியூகம் வகுத்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியினர் பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தி மராட்டியத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
ஏமாற்றம் தந்த காங்கிரஸ்:
காலை 10 மணி நிலவரப்படி பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 218 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதனால், அங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மீண்டும் தொடர இருப்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க. தாங்கள் போட்டியிட்ட 149 இடங்களில் 121 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். 81 தொகுதிகளில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 58 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். 59 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி பா.ஜ.க.விற்கு பெரும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த சவாலும் அளிக்காமல் பெரும் பின்னடைவைடச் சந்ததித்து இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 101 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றனர். 86 தொகுதிகளில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளில் 16 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றனர்.
யார் முதலமைச்சர்?
மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணி மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கும், கூட்டணி கட்சியினருக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மீண்டும் மகாராஷ்ட்ராவில் அமைவது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதற்கான பேச்சுவார்த்தையை கூட்டணிக்குள் தற்போதே தொடங்கிவிட்டனர். ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புவார் என்பதாலும், கடந்த முறை இழந்த முதல்வர் பதவியை மீண்டும் பிடிக்க பா.ஜ.க. விரும்பும் என்பதாலும், மற்றொரு முனையில் அஜித் பவாரும் அரியணைக்கு ஆசைப்படுவார் என்பதாலும் மகாராஷ்ட்ரா இன்று முதல் அரியணை மோதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.