IND vs NZ: கூக்ளி தாக்குதல் நடத்தும் குல்தீப்.. வித்தை காட்டும் வருண்! சுழல் சாம்ராஜ்யம் நடத்தும் இந்தியா!
IND vs NZ: துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த ரவீந்திராவை தனது கூக்ளியால் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார்.

champions trophy IND vs NZ Final: துபாயில் இ்ன்று சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா:
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டத்தை வில் யங் - ரவீந்திரா தொடங்கினர். வில் யங் நிதானமாக ஆட ரவீந்திரா அதிரடியாக ஆடினார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய ரவீந்திரா இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி வருகிறார்.
சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இதுபோன்ற போட்டியில் பேட்டிங், பவுலிங்கிற்கு நிகராக ஃபீல்டிங்கும் உள்ளது. ரவீந்திரா அளித்த கடினமான கேட்ச் ஒன்றை அவருக்கு பந்துவீசிய முகமது ஷமி தவறவிட்டார். அதன்பின்பு, வருண் சக்கவர்த்தி ஓவரில் ரவீந்திரா தந்த கேட்ச் ஒன்றை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார்.
மேலும், வருண் சக்கரவர்த்தி வீசிய அவரின் முதல் ஓவரின் முதல் பந்து சுழன்று ஒயிடாக சென்றது. அந்த பந்தை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் கோட்டை விட்டதால் அந்த பந்து பவுண்டரிக்குச் சென்றது. இறுதிப்போட்டி போன்ற முக்கியமான போட்டியில் இந்திய அணியினர் இதுபோன்று ஃபீல்டிங் செய்து வருவது ஆட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவு உள்ளது.
தொடங்கிய சுழல் தாக்குதல்:
இருப்பினும், வருண் சக்கரவர்த்தி தனது சுழலால் தொடக்க வீரர் வில் யங்கை அவுட்டாக்கினார். அவர் 23 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். தற்போத ரவீந்திரா - வில்லியம்சன் ஜோடி ஆடி வருகிறது. மைதானத்தில் சுழல் தாக்கம் இருக்கும் என்பதால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வருண் சக்கவர்த்திக்கு தொடர்ந்து ஓவர் அளித்து வருகிறார்.
விக்கெட்டுகள் விழுமா?
மேலும், வருண் சக்கரவர்த்தி மட்டுமின்றி குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஷர் படேல் ஆகியோரும் சுழலில் அசத்த காத்துள்ளனர். ரவீந்திரா - வில்லியம்சன் ஜோடியை பிரிக்க வேண்டியது இந்திய அணிக்கு மிக மிக அவசியம் ஆகும். ஏனென்றால், பின்வரிசையில் டேரில் மிட்செல், டாம் லாதம், ப்லிப்ஸ், ப்ராஸ்வெல், சான்ட்னர் உள்ளனர். இந்தியா - நியூசிலாந்து அணிகள் லீக் போட்டியில் மோதியதை காட்டிலும் தற்போது மைதானம் ஓரளவு பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பது போல உள்ளது.
ரவீந்திரா காலி
இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த ரவீந்திராவை குல்தீப் யாதவ் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே அவுட்டாக்கினார். அவர் வீசிய கூக்ளியால் 29 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திரா போல்டானார். நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வில்லியம்சன் 14 பந்துகளில் 11 ரன்களுடன் குல்தீப் யாதவ் பந்தில் அவுட்டானார்.




















