Fake muslim zindabad Videos: 'அம்பேத்கர்' என சொன்னதை 'பாகிஸ்தான்' என மாற்றி தில்லுமுல்லு..! கலவரத்தை தூண்டிய வீடியோ எடிட்!
குற்றச்செயல்களில் ஈடுபட்டது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றது, வன்முறை சம்பவங்களைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கர்நாடகா: நாட்டின் பல பகுதிகளில் சமூக ஊடக தொழில்நுட்பங்களின் வாயிலாக போலியான தகவல்கள் கொண்டு வன்முறையைத் தூண்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் தனது கணவனை கைது செய்த காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக 'அம்பேத்கர் ஜிந்தாபாத்' என்று கூச்சலிட்ட இஸ்லாம் பெண்ணின் வீடியோவை 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று போலியாக சித்தரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை தவறான காரணங்களுக்காக கைது செய்தபட்டதாக கூறி சானிவரசாந்தே காவல்நிலையம் முன்பு ஒன்று கூடினர். அப்போது, சிறையில் உள்ள நபரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், 'அம்பேத்கர் ஜிந்தாபாத்' என்று கூச்சலிட்டிருக்கிறார்.
செய்தி சேகரிப்புக்கு சென்ற ஹரிஷ், ராகு என்ற இரண்டு பத்திரிக்கையாளர்கள் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், மதக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கூறியது போல விடியோவை போலியாக சித்தரித்து வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துள்ளனர்.
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்'என்று கூச்சலிடுவதின் மூலம் இந்தப் பகுதியில் உள்ள இந்து சமூக மக்கள் அடக்கு முறைக்கு உள்ளாகிவருகின்றனர், இந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்ற இழிவான பொய்த் தகவல் பிரச்சாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர்.
இந்த போலி பிரச்சாரங்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராகு, கிரீஷா உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் கண்டறிந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்டது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றது, வன்முறை சம்பவங்களைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொய் செய்திகள்:
இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து இருப்பதன் வாயிலாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் தொடர்பாக புகார்கள் பெருமளவில் உயர்ந்துள்ளன. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் ஆய்வுப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு 486 ஆக இருந்த இணையதள குற்றங்களின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 1,527 ஆக உயர்ந்துள்ளது. இதில், பெரும்பாலும் கொரோனா இரண்டாவது அலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ படிக்கை பற்றாக்குறை உள்ளிட்ட பொய் செய்திகள் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்