Karnataka Election Results 2023 LIVE: திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றம் - கர்நாடக தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து..!
Karnataka Election Results 2023 LIVE Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
LIVE
Background
Karnataka Election Results 2023 LIVE
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டமன்ற தேர்தல்
மத்தியில் ஆளும் அரசாக உள்ள பாஜக தென்னிந்தியாவில் ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாவாகும். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்திற்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். அதன்படி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாகவே கர்நாடகா முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டியது. திரும்பும் திசையெங்கும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம், தொண்டர்கள் அணிவகுப்பு, வித்தியாசமான வாக்கு சேகரிப்பு என இந்தியா முழுமைக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டு நடக்கவுள்ள தேர்தல்கள் அரசியல் கட்சிகள் இடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கு முன்மாதிரியாக கர்நாடகா சட்டமன்ற தேர்தல் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என பாஜக ஒருபுறம் களமிறங்க, மறுபுறம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் வருகை தந்தனர்.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு
திட்டமிட்டபடி கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் 73.19 சதவீதவாக்குகள் பதிவாகிய நிலையில் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு தரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆட்சியமைக்கப்போவது யார்?
பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சுயேட்சைகள் சேர்த்து மொத்தம் 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலைக்குள் 16வது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.
ஆட்சிக்கு அமைக்க தேவையான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி..!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Karnataka Election Results 2023 LIVE: 50 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக - தேர்தல் ஆணையம் தகவல்..!
50 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
Karnataka Election Results 2023 LIVE: 107 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தற்போது வரை, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 107 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 29 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
Karnataka Election Results 2023 LIVE: வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக பாடம் கற்கும் - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்..!
கர்நாடக தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "அவர்களுக்கு (பாஜக) மக்கள் பாடம் புகட்டுவார்கள். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அனைத்து தேர்தல்களிலும் அவர்கள் பாடம் கற்பார்கள்" என்றார்.
வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள் - கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல் வாழ்த்து..!
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "பிரிவினையை நிராகரிக்க வேண்டும் என கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்" என கமல் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.