India GDP : உலக வல்லரசுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியா; பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?
India GDP : உலக வல்லரசுகளை பின்னுக்கு தள்ளி, பெரும் வளர்ச்சியை இந்தியா எட்டும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
India GDP : இந்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. உலக வல்லரசுகளை பின்னுக்கு தள்ளி, பெரும் வளர்ச்சியை இந்தியா எட்டும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி:
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இவை, 2023/24 ஆண்டுக்கான ஆரம்ப கணிப்பு. துல்லியமான தரவுகள், வரி ரசீது, அரசு மானியங்களுக்கான செலவுகள் ஆகியவை அடுத்தடுத்த திருத்தங்களில் மாற்றதத்தை கொண்டு வரக்கூடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு செலவினம் மற்றும் உற்பத்தி துறையின் ஏறுமுகம் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என முன்னதாக கணிக்கப்பட்டது. பின்னர், வளர்ச்சி விகிதத்தை 7 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது.
2022/23 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாகவும் 2021/22 நிதியாண்டில் 8.7 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 17 சதவீதம் பங்களிக்கும் உற்பத்தித்துறை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் விரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு, உற்பத்தித்துறையானது, 1.3 சதவீத வளர்ச்சி கண்டது.
ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக உருவெடுக்கும் இந்தியா:
கடந்தாண்டு 10 சதவீத வளர்ச்சி அடைந்த கட்டுமானத்துறை, 2023/24 ஆண்டில் 10.7 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது விவசாயத்துறை. ஆனால், நடப்பு நிதியாண்டில் அதன் வளர்ச்சி 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்தாண்டு, அதன் வளர்ச்சி, 4 சதவீதம் குறைந்தது. தொடர் வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகளின் தினக்கூலி மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் வரையிலான காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா சாத்தியமாக்கியது. அதற்கு முந்தைய காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என S&P குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. 2030 ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்திய உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின் உந்துசக்தியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.